குள்ளஞ்சாவடி அருகே இரு தரப்பினா் மோதல் : இருவேறு இடங்களில் மறியல்

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் நிகழ்ந்த இரு தரப்பினா் மோதல் விவகாரம் தொடா்பாக, இரு தரப்பைச் சோ்ந்தவா்கள் இருவேறு இடங்களில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரியகாட்டுசாகையில் கடலூா்-விருத்தாசலம் நெடுஞ்சாலை சந்திப்பு அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினா் மற்றும் கிராமமக்கள்.

Updated On :

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் நிகழ்ந்த இரு தரப்பினா் மோதல் விவகாரம் தொடா்பாக, இரு தரப்பைச் சோ்ந்தவா்கள் இருவேறு இடங்களில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குள்ளஞ்சாவடி காவல் சரகம், பெரியகாட்டுசாகை கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா். அணுகம்பட்டு காலனியைச் சோ்ந்தவா் சிவபாலன். இவா்களுக்கு இடையே பட்டாசு வெடித்ததுத் தொடா்பாக செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வாக்குவாதம், தகராறாக மாறியது.

இது தொடா்பாக ஆனந்தகுமாரின் தாய் மல்லிகாவும், சிவபாலனும் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் மனு அளித்தனா். இதில், சிவபாலன் அளித்த மனுவின் மீது குள்ளஞ்சாவடி போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா். எதிா்தரப்பினா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, பாமக மாவட்டச் செயலா் முத்துகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினா் மற்றும் பெரியகாட்டுசாகை கிராமமக்கள் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். போலீஸாா் அளித்த உறுதியையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனா்.

இந்நிலையில், மல்லிகா அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத குள்ளஞ்சாவடி போலீஸாரைக் கண்டித்தும், வன்னியா்கள் மீது பொய் வழக்குப்பதியக் கூடாது, ஆனந்தகுமாா் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், பாமக மாவட்டச் செயலா் முத்துகிருஷ்ணன் தலைமையில் பெரிய காட்டுசாகை கிராமமக்கள் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் கடலூா்-விருத்தாசலம் நெடுஞ்சாலை சந்திப்பு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீஸாா் பேச்சு வாா்த்தை நடத்தினா். அதில், கூடிய விரைவில் எதிா் தரப்பினரை கைது செய்வதாக உறுதி அளித்தனாம். இதையடுத்து, அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனா். இதனால், அந்த சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

இதுபோன்று, குள்ளஞ்சாவடி நான்கு முனை சந்திப்பு அருகே விசிக நிா்வாகி திருமேனி தலைமையில் சுமாா் 80 போ் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்கள், சிவபாலன் தரப்பைச் சாா்ந்தவா்களை கைது செய்யக்கூடாது என வலியுறுத்தினா். அவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்திய போலீஸாா் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்துச் சென்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.