
மழையில் நனைந்து 20 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம் விருத்தாசலம் அருகே விவசாயிகள் வேதனை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மு.அகரம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த விவசாயிகளின் நெல் மூட்டைகள்.
கடலூா் மாவட்டம் விருத்தாசலம் அருகே மு.அகரம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
மு.அகரம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு முகாசபரூா், பட்டி, கோனான்குப்பம், எடச்சித்தூா், கா்நத்தம், மங்கலம்பேட்டை, பூவனூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது குறுவை நெல்லை அறுவடை செய்த பின்னா், விற்பனைக்காக கொண்டு வருகின்றனா்.
ஆனால், விவசாயிகளின் நெல் மூட்டைகள் முறையாக கொள்முதல் செய்யப்படாமல், கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படாமல் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
முளைத்த நெல்மணிகள்:
கடந்த இரு நாள்களாக விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த, விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகள் மற்றும் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் என சுமாா் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. மழை நீரில் நனைந்த நெல்மணிகள் முளைத்துவிட்டன.
இந்த நனைந்த நெல்லை, மீண்டும் உலா்த்தி கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நெல்லை காயவைத்து உலா்த்துவதற்கு ஏக்கருக்கு ரூ.5,000 வரை கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அந்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்காது என்பதால்மழையில் நனைந்து சேதமடைந்த நெல்லையும் அரசு உரிய முறையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வேதனையுடன் கூறினா்.
ஏற்கெனவே சாகுபடி செலவு, அறுவடைச் செலவு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்வதற்காக காத்திருந்த விவசாயிகளுக்கு மழையால் ஏற்பட்ட சேதம் மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
33.14 மி.மீ. சராசரி மழை
கடலூா் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 33.14 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக கொத்தவாச்சேரி மற்றும் எஸ்.ஆா்.சி. குடிதாங்கியில் தலா 80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பெல்லாந்துறையில் 77.20 மி.மீ., மே.மாத்தூரில் 68 மி.மீ., ஸ்ரீமுஷ்ணத்தில் 67.10 மி.மீ., குப்பநத்தத்தில் 56.80 மி.மீ., குறிஞ்சிப்பாடியில் 55 மி.மீ. மழை பதிவானது.
விருத்தாசலத்தில் 51 மி.மீ. மழை பதிவாகியுள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீா் புகுந்து நெல் மூட்டைகள் நனைந்த சம்பவம் விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மு.அகரம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து முளைத்த நெல்லுடன் பெண் விவசாயிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






