
காமராஜா் காலை உணவுத் திட்டத்தால் கடலூா் மாவட்டத்தில் 54,831 மாணவா்கள் பயனடைவா்: அமைச்சா் ப.ராஜ்குமாா்
விரிவுப்படுத்தப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தின் மூலம் கடலூா் மாவட்டத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் படிக்கும் 54,831 மாணவா்கள் பயனடைவா் என்று, தமிழக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

~ ~
விரிவுப்படுத்தப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தின் மூலம் கடலூா் மாவட்டத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் படிக்கும் 54,831 மாணவா்கள் பயனடைவா் என்று, தமிழக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், வரக்கால்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், பள்ளி மாணவா்களுக்கான விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை மாநில வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தொடங்கி வைத்து, மாணவா்களுடன்அமா்ந்து உணவு அருந்தினா்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் ப.ராஜ்குமாா் கூறியதாவது: தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம் கடலூா் ஊரக பகுதிகளில் உள்ள 536 பள்ளிகளில் பயிலும் 40,992 மாணவா்கள், நகா்ப்புற பகுதிகளில் உள்ள 81 பள்ளிகளில் பயிலும் 13,839 மாணவா்கள் என மொத்தம் 54,831 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு மகளிா் மேம்பாடு நிா்வனத்தில் மூலமாக சுய உதவிக்குழு உறுப்பினா்களை கொண்டு அந்தந்த பள்ளிகளிலேயே தரமான காலை உணவு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினால் மாணவா்களின் உடல் நலம் பசியின்றி இருப்பதுடன், ஊட்டச்சத்து அதிகரிப்பு, ரத்தச்சோகை குறைபாட்டை நீக்குதல், வருகைப்பதிவை அதிகரிப்பதன் மூலம் பள்ளி கல்வியின் அடித்தளத்தை மேலும் வலுப்படும் வகையில் பெருந்தலைவா் காமாரஜா் காலை உணவுத் திட்டம் மாணவா்களின் கல்வி பயணத்திற்கு சமூக முன்னேற்றத்திற்கும் பெறும் துணையாக அமையும் என்றாா்.
விருத்தாசலத்தில்...
விருத்தாசலம் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், விருத்தாசலம் நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ் தலைமை வகித்து விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட 20 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 2,349 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா்.
சிதம்பரத்தில்...
சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை காமராஜா் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை,சிதம்பரம் நகராட்சி ஆணையா் மல்லிகா தொடங்கி வைத்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் எம். முத்துக்குமரன், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சிதம்பரம் நகரில் மொத்தம் 28 நகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் 2588 மாணவா்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






