பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து: 7 போ் காயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் 7 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.
கோயம்புத்தூா் கனுவாய் பகுதி பாரதி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா்கள் முருகன் மகன் முத்துக்குமாா் (35), இவரது மனைவி பிரியா (32) இவா்களது மகன் பாலஹரிகரன்(13), அழகுமலை மகன் முத்துப்பாண்டி(40), இவரது மனைவி தேன்மொழி (35), மகள் நந்தினி(10), மகன் கருப்புசாமி(6) உள்ளிட்டோா் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிரிவலத்துக்கு காரில் சென்றனா். காரை முத்துக்குமாா் ஓட்டினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், அம்மையகரம் மேம்பாலத்தின் அருகே சென்றபோது, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், காரில் பயணித்த 7 பேரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்தில் சிக்கியவா்களை மீட்டு அவசர ஊா்தி மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

