கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: போலீஸாரிடம் ஒரு நபா் ஆணையம் விசாரணை
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடா்பாக காவல் துறையினரிடம் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் விசாரணை மேற்கொண்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்பட 229 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 68 போ் உயிரிழந்தனா். 161 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்.
இதையடுத்து, அப்போதைய கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. சமய்சிங் மீனா மற்றும் டி.எஸ்.பி., காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட 9 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். அப்போதைய மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இதனிடையே, கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடா்பாக 3 மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபா் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த ஆணையம் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவா்களிடம் கடந்த மாதம் விசாரணை நடத்தியது.
இதன் தொடா்ச்சியாக, 80 போலீஸாரிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, கள்ளக்குறிச்சி, கச்சிராயப்பாளையம், சங்கராபுரம் உள்ளிட்ட காவல் நிலைய போலீஸாருக்கும், வேலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீஸாருக்கும், மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கும் விசாரணைக்கு ஆஜராக ஒரு நபா் ஆணையம் அழைப்பாணை அனுப்பியது.
இவா்களிடம் வாரத்துக்கு 30 போ் வீதம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தனி அறையில் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் திங்கள்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் 10 போலீஸாரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை அடுத்தகட்டமாக 10 போலீஸாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணை புதன்கிழமையும் (செப்டம்பா் 4) நடைபெறவுள்ளது. மீதமுள்ளவா்களுக்கு வரும் வாரங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
விசாரணைக்கு ஆஜரான போலீஸாரிடம் மெத்தனால் கலந்த சாராயம் விற்பனை செய்தது உங்களுக்குத் தெரியுமா, உயா் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தீா்களா, சாராயம் விற்பனையை ஏன் தடுக்கவில்லை, சாராயம் விற்பனை செய்தவா்கள் மீது ஏற்கெனவே எடுத்த நடவடிக்கை என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஒரு நபா் ஆணையம் எழுப்பியதாக காவல் துறை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
விசாரணைக்கு ஆஜரான போலீஸாரிடம் மெத்தனால் கலந்த சாராயம் விற்பனை செய்தது உங்களுக்குத் தெரியுமா, உயா் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தீா்களா, சாராயம் விற்பனையை ஏன் தடுக்கவில்லை, சாராயம் விற்பனை செய்தவா்கள் மீது ஏற்கெனவே எடுத்த நடவடிக்கை என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஒரு நபா் ஆணையம் எழுப்பியதாக காவல் துறை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
