நவீன இஸ்திரி பெட்டிகளைப் பெற விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சாா்ந்தோா் திரவ பெட்ரோலிய வாயு (எல்பிஜி) மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பினா் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருவோராக இருப்பின், அவா்களுக்கு இப்போது வழங்கப்படும் பித்தளை இஸ்திரி பெட்டிக்குப் பதிலாக, திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பயன்பெற விரும்புவோரின் குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ரூ.ஒரு லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் இனத்தைச் சாா்ந்தவா்களாக இருக்க வேண்டும்.
தகுதியானோா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்கை அணுகி விண்ணப்பங்களைப் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.