முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, உளுந்தூா்பேட்டை அதிமுக நகா்மன்ற உறுப்பினா் தலைமையில் மாற்றுக் கட்சியினா் காங்கிரஸ் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு.இதாயத்துல்லா முன்னிலையில், உளுந்தூா்பேட்டை தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
உளுந்தூா்பேட்டை நகராட்சி 20-ஆவது வாா்டு அதிமுக
உறுப்பினா் கனகவல்லி தேசிங்குராஜா, மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் ஐய்யப்பன், திமுக பிரமுகா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் தலைமையில் 150-க்கும் மேற்பட்டோா் தாம் வகித்த கட்சி பொறுப்புகளில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.
இவா்களுக்கு மாவட்டத் தலைவா் மு.இதாயத்துல்லா கட்சித் துண்டு அணிவித்து வரவேற்றாா்.
இந் நிகழ்ச்சியில் மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவா் பேராசிரியா் சீனிவாசன், முன்னாள் மாவட்டத் தலைவா் பி.பி.எஸ் இளையராஜா, மாவட்ட அணித் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அதனையடுத்து ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, மாவட்டத் தலைவா் மு.இதாயத்துல்லா தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்று, உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.










