ஆளுநர் மாளிகை மூலம் 13 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு: கிரண் பேடி
புதுச்சேரி ஆளுநர் மாளிகை மூலம் 2017-ஆம் ஆண்டில், 13,075 புகார்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.


புதுச்சேரி ஆளுநர் மாளிகை மூலம் 2017-ஆம் ஆண்டில், 13,075 புகார்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கட்செவி அஞ்சல் மூலம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி ஆளுநர் மாளிகை 2017-ஆம் ஆண்டில் 13,075 மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. இந்த புகார்கள் எல்லாம் பல திசைகளில் இருந்து வந்துள்ளன.
மக்கள் குறைகேட்பு மையத்தில் இருந்து 5,762 புகார்களும், மின்னஞ்சல் மற்றும் இணையதளத்தின் மூலம் 5,692 புகார்களும், கட்செவி அஞ்சல் மூலம் 1,632 புகார்களும், செய்தித்தாள்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்களும் வந்துள்ளன.
பெரும்பான்மையான புகார்கள் (2,492) சுகாதாரம், கழிவுநீர், குப்பை அகற்றுதல், குளம் தூர்வாருதல், மின்தடை, தெருவிளக்குகள், ஆக்கிரமிப்புகள், தெருநாய், கால்நடைகள் தொல்லை, அபாயகரமான சாலைகள், மரக்கிளைகளை அகற்றல் ஆகியவை தொடர்பான பிரச்னைகள் வந்துள்ளன.
அடுத்தபடியாக, அரசு பணிகளில் பணி நியமனம், பணிமாற்றம், பதவி உயர்வு, ஓய்வூதிய திட்டம், காலதாமதங்கள், பணி ஒழுங்கு செய்வதில் காலதாமதம், தாற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்தல், காலி இடங்களை நிரப்புதல், முறைகேடாக பணி அமர்த்தல் தொடர்பான புகார்கள் வந்துள்ளன.
அதேபோல, கல்வித் துறையில் ஆசிரியர் பற்றாக்குறை, பள்ளிகளின் அடிப்படை வசதிகள், முதல் மற்றும் தலைமை ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவை தொடர்பான குறைகளும் வந்துள்ளன. பெரும்பான்மையான குறைகள், மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் முறைகேடுகள், தவறான ஒப்பந்தங்கள், ஹைமாஸ் விளக்கு, மக்கள் நலத்திட்டங்களில் சுணக்கம், கட்டி முடித்தும் பயன்பாட்டுக்கு வராத அரசு கட்டடங்கள் தொடர்பான புகார்களும் அதிகம் வந்தன.
மேலும், ரெüடிகள் தொல்லை, மிரட்டல் மற்றும் நில அபகரிப்பு தொடர்பான பிரச்னைகளும் தீர்க்கப்பட்டன. சாராயக்கடை, மதுபானக்கடைகள் தொடர்பான பிரச்னைகள், சாலை பாதுகாப்பு மற்றும் குடும்பப் பிரச்னைகளும் வந்தன.
ஆளுநர் மாளிகையின் மக்கள் குறைதீர்க்கும் குழுவில் ஆளுநர், ஆளுநரின் செயலர், ஆளுநரின் தனி செயலர், மக்கள் குறைகேட்பு அதிகாரி, மக்கள் தொடர்பு அலுவலர், குடும்ப நல ஆலோசகர், மக்கள் நீதிமன்ற வழக்குரைஞர் ஆகியோர் உள்ளனர். தினமும் மாலை 5 முதல் 7 மணி வரை மக்களிடம் குறைகேட்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
ஏழைகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வருகின்றனர். அவர்கள் இளைப்பாற தேநீர் வழங்கப்படுகிறது. காரைக்கால் மாஹே, ஏனாம் ஆகிய பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை தோறும் தங்கள் குறைகளை காணொலிக் காட்சி மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை வெறும் அஞ்சல் நிலையம் போல் செயல்படாமல் வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது சம்பந்தப்பட்ட துறை மற்றும் துறை அலுவலர்களை தொடர்பு கொள்கிறது. இதுவரை 128 வாராந்திர களப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் பிரச்னைகளை நேரிடையாக களம் இறங்கி தீர்த்து வைக்க இக்களப்பயணங்கள் உதவுகின்றன.
மேலும், உள்ளூர் தலைவர்கள் சிலரின் அச்சுறுத்தல், எதிர்ப்புகளை மீறி இப்பயணங்கள் மக்கள் நலனுக்காக நடந்துள்ளன. ஆளுநர் மாளிகையின் கடும் முயற்சியால் மன உறுதியால் ஆளுநர் இல்லம் மக்கள் இல்லமாக மாறியுள்ளது.
மக்கள் தொடர்பு கொள்வதற்கான சேவைகள்: கட்செவி அஞ்சல் - 9500560001, சமூக வலைதளம் - twitter@lgov_puducherry, facebook@lg.gov.puducherry, மக்கள் குறைகேட்பு இணைய தளம் - http://lgpgrs.py.gov.in மின்னஞ்சல் -lg.pon@nic.in ஆகியவற்றை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...