புதுவை சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் பேசியதாவது: இந்தியாவின் மூத்த தலைவரான கருணாநிதி மிகச் சிறந்த எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் மற்றும் சிந்தனையாளர். 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்துள்ள அவர், நீண்ட காலமாக அரசியலில் இருப்பது சிறப்பக்குரியதும், சாதனைக்குரியதும் ஆகும். அவருடைய அனுபவம் இன்றைக்கும் அரசியலில் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. புதுவை சட்டப்பேரவை சார்பில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் வைத்திலிங்கம்.
தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா: திமுக தலைவர் கருணாநிதி அனைவருக்கும் வழிகாட்டி. அவருக்கு சட்டப்பேரவையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மொழி, இனத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இந்தித் திணிப்பை எதிர்த்து தொடர்ந்து போராடியவர். அனைத்துத் துறையிலும் முத்திரை பதித்தவர். ஜனநாயக அடிப்படையில் கட்சியை சிறப்பாக கட்டிக் காத்து வருகிறார் என்றார் சிவா எம்.எல்.ஏ.
முதல்வர் நாராயணசாமி: தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும், தொடர்ந்து 13 முறை பேரவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு இருந்து வருபவர் கருணாநிதி. தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்காக போராடியவர். தமிழ் சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்க மிகப் பெரிய பங்காற்றியுள்ளார். அரசியலில் பல போராட்டங்களையும் போர்க்களங்களையும் சந்தித்தவர். எம்ஜிஆர் மூன்று முறை முதல்வராக இருந்த போதிலும் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல் தோல்விகளால் துவண்டுபோகாமல் தொண்டர்களுடன் சந்தித்து, மீண்டும் ஆட்சிக்கு வந்தவர். பல பிரதமர்களை உருவாக்கியவர் என்றார் முதல்வர் நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.