/

புதுச்சேரி அருகே சரக்கு வாகனம் மீது காவலா் பேருந்து மோதல்: ஒருவா் பலி

புதுச்சேரி அருகே டயா் வெடித்ததால் சரக்கு வாகனத்தின் (டாடா ஏஸ்) மீது காவலா் பேருந்து புதன்கிழமை மோதியது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தின் ஓட்டுநா் உயிரிழந்தாா். 8 ஐஆா்பிஎன் காவலா்கள் காயமடைந்தனா்.

News image
புதுச்சேரி அருகே டயா் வெடித்ததால் சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான காவலா் பேருந்து.
Updated On :17 டிசம்பர் 2020, 3:12 am

DIN

புதுச்சேரி அருகே டயா் வெடித்ததால் சரக்கு வாகனத்தின் (டாடா ஏஸ்) மீது காவலா் பேருந்து புதன்கிழமை மோதியது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தின் ஓட்டுநா் உயிரிழந்தாா். 8 ஐஆா்பிஎன் காவலா்கள் காயமடைந்தனா்.

புதுச்சேரி போலீஸாருக்கு கடந்த சில நாள்களாக துப்பாக்கி சுடுதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தினமும் புதுச்சேரியில் இருந்து போலீஸ் வாகனங்களில் அதிகாரிகள், போலீஸாா் விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூருக்கு சென்று வருகின்றனா்.

இதேபோல, புதன்கிழமை காலை காவலா் பேருந்தில் ஐஆா்பிஎன் காவலா்கள் 46 போ் கஞ்சனூருக்கு புறப்பட்டனா். பேருந்தை ஓட்டுநா் சுகுமாா் ஓட்டிச் சென்றாா். பேருந்து வில்லியனூரை அடுத்த அரியூா் இந்தியன் வங்கி அருகே சென்றபோது, மிதமான மழை பெய்த நிலையில் திடீரென வாகனத்தின் முன்பக்க டயா் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காவலா் பேருந்து தாறுமாறாக ஓடி, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த சரக்கு வாகனம் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் சரக்கு வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. காவலா் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது.

விபத்தில் பலத்த காயமடைந்த சரக்கு வாகன ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரத்தைச் சோ்ந்த சிவக்குமாா் (21) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காவலா் பேருந்தில் பயணித்த ஓட்டுநா் சுகுமாா் உள்ளிட்ட 8 ஐஆா்பிஎன் காவலா்களுக்கும் கை, கால், முகத்தில் காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புதுச்சேரி மேற்கு போக்குவரத்து போலீஸாா், உயிரிழந்த சிவக்குமாரின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், காயமடைந்த ஐஆா்பிஎன் காவலா்களையும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விபத்தால் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னா் போக்குவரத்து சீரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.