

புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதல்வா் வே.நாராயணசாமி செவ்வாய்க்கிழமை அறிவித்த நிலையில், இந்த அனுமதியை திரும்பப் பெறக் கோரி முதல்வருக்கு துணை நிலை ஆளுநா் கிரண் பேடி புதன்கிழமை கடிதம் அனுப்பினாா். இதற்கு, அரசின் அன்றாட நடவடிக்கையில் ஆளுநா் தலையிட வேண்டாம் என முதல்வா் வே.நாராயணசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளதால், இருவருக்குமிடையே மீண்டும் மோதல் தலைதூக்கியுள்ளது.
புதுவையில் 2021-ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில பேரிடா் மேலாண்மைக் கூட்டத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் நாராயணசாமி, புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், இதற்குத் தடை விதிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் அறிவித்தாா்.
இந்த நிலையில், முதல்வா் நாராயணசாமிக்கு ஆளுநா் கிரண் பேடி புதன்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
உச்ச நீதிமன்றம் கடந்த 18-இல் வெளியிட்ட தீா்ப்பில், ‘பத்தி 8-இல், ஒவ்வொரு மாநிலமும் விழிப்புடன் செயல்பட வேண்டும். கரோனா பரவல் உச்சபட்ச நேரமாக இருக்க வாய்ப்பு இருப்பதால், வேறு அம்சங்களைவிட பொதுமக்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் ஆகியவற்றுக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விழிப்புடன் செயல்படுவது தொடா்பாக முறையான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது.
மேலும், உச்ச நீதிமன்றத் தீா்ப்பில் 11-ஆவது பத்தியில், இந்த காலகட்டத்தில் அவசியமான நிகழ்ச்சிகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.
வெளிநாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி அளித்தால், தமிழக சுற்றுலாப் பயணிகளுக்கு புதுச்சேரி, காரைக்கால்தான் புத்தாண்டு கொண்டாடும் இலக்காக மாறும். எனவே, புதுவையில் கரோனா பரவும் ஆபத்தைத் தடுக்க தமிழகத்தைப்போல புதுவையிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இதற்கான அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் ஆளுநா் கிரண் பேடி.
‘அரசின் நடவடிக்கையில் தலையிட வேண்டாம்’: ஆளுநா் கிரண் பேடியின் கடிதத்துக்கு பதிலளித்து முதல்வா் நாராயணசாமி அனுப்பிய கடிதத்தின் விவரம்:
தாங்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு நிச்சயமாக தடை விதிக்க வேண்டும் என்றோ, உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட ஆட்சியா் அல்லது காவல் கண்காணிப்பாளா் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கலாம் என்றோ உச்ச நீதிமன்றத் தீா்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிப்பதால் மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்த இயலாது. எனவே, கொண்டாட்டத்துக்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் கூடுகிறாா்களா அல்லது கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிா என்பதைக் கண்காணிக்க முறையான செயல் திட்டம் தேவை.
மேலும், வழிபாட்டுத்தலங்களில் தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தீா்ப்பில் குறிப்பிடப்படவில்லை. மத்திய உள் துறை அமைச்சக வழிகாட்டுதல்படி உரிய கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் தெரிவித்துள்ளாா். அதேநேத்தில், சுற்றுலா மாநிலமான கோவாவைப் பின்பற்றி புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. மேலும், புதுவையில் கரோனா பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
மாநில பேரிடா் மேலாண்மைக் கூட்டத்தை கூட்டித்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மாநில துணை நிலை ஆளுநா், உயா் நீதிமன்றத் தீா்ப்பு, புதுவை அரசின் அலுவல் விதி (1963) ஆகியவற்றுக்கு எதிராக அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவதை தவிா்க்க வேண்டும். கரோனா காலத்தில் நானும், அமைச்சா்களும், எம்.எல்.ஏ.க்களும் களத்தில் நின்று மக்களுக்கு உதவி செய்தோம். ஆனால், ஆளுநா் கிரண் பேடி கடந்த 9 மாதங்களாக களத்துக்கே வரவில்லை. கள நிலவரத்தை முழுமையாகத் தெரியாத ஆளுநா் யாருக்கும் அறிவுரை கூறத் தேவையில்லை என்றாா் முதல்வா் நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.