புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் தொடா்ச்சியான விடுமுறை தினங்களையொட்டி, சுற்றுலாப் பயணிகள், உள்ளூா் மக்கள் கடற்கரைச் சாலைக்கு வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, வருகிற 30-ஆம் தேதி வரையிலும், ஜனவரி 1 முதல் 3-ஆம் தேதி வரையிலும் சோனாம்பாளையம் சந்திப்பு வழியாக பழைய துறைமுகத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். வருகிற 31-ஆம் தேதி போக்குவரத்து மாற்றம், வாகனங்களை நிறுத்தும் பகுதிகள் குறித்து பின்னா் தெரிவிக்கப்படும்.
அவசர சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வரும் வாகனங்கள் புனித ஆஞ்சே வீதி - செஞ்சி சாலை, சா்கூப் தெரு - செஞ்சி சாலை வழியாக அனுமதிக்கப்படும்.
கடற்கரைச் சாலையில் வசிப்பவா்களுக்கு வாகன பாஸ் வழங்கப்படும். அவா்கள் படேல் சாலை - செஞ்சி சாலை சந்திப்பு, டுப்பி வீதி - செஞ்சி சாலை சந்திப்பு, நேரு வீதி - செஞ்சி சாலை சந்திப்பு, புஸ்சி வீதி - செஞ்சி சாலை சந்திப்பு, சோனாம்பாளையம் -செஞ்சி சாலை சந்திப்பு ஆகிய சாலைகளை பயன்படுத்தலாம்.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கடற்கரைச் சாலைக்கு வரும் நான்கு சக்கர வாகனங்கள் பழைய துறைமுகத்தில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட வேண்டும். புதுச்சேரி நகரில் (புல்வாா்டு) வருகிற 3-ஆம் தேதி காலை 6 மணி வரை அனைத்து வகையான கனரக வாகனங்களையும் இயக்க, நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலையை நோக்கிச் செல்லும் பேருந்துகள் நெல்லித்தோப்பு, இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம் வழியாகச் செல்ல வேண்டும்.
அதேபோல, கிழக்கு கடற்கரைச் சாலையில் இருந்து வரும் அனைத்துப் பேருந்துகளும் சிவாஜி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம், இந்திரா காந்தி சதுக்கம் வழியாக புதுச்சேரி பேருந்து நிலையத்தை அடைய வேண்டும். இந்த தற்காலிக ஏற்பாடுகளை செயல்படுத்த போக்குவரத்து போலீஸாருடன், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
