புதுச்சேரியில் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பல இடங்களில் மின்தடையால் சாலை மறியல்

புதுச்சேரியில் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் வெள்ளிக்கிழமையும் பல்வேறு இடங்களில் மின்தடை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி கோரிமேடு எல்லைப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
புதுச்சேரி கோரிமேடு எல்லைப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

புதுச்சேரியில் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் வெள்ளிக்கிழமையும் பல்வேறு இடங்களில் மின்தடை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என அரசு ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டதையடுத்து புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் புதன்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டம் காரணமாக புதுச்சேரி நகர மற்றும் கிராம பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பெருமளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை காலை புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கோரிமேடு எல்லைப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரக்கூடிய வாகனங்களும், பேருந்துகளும், புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு செல்லக்கூடிய வாகனங்களும் செல்ல முடியாமல் அங்கங்கே நிறுத்தி வைக்கப்பட்டது.

புதுச்சேரி காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

எல்லைப் பகுதியில் இரு மாநில போலீசாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். இதேபோன்று புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராம மக்கள் மின்தடை காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக பேருந்துகள் நின்றதால் பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரம் வந்தால் மட்டுமே சாலை மறியல் கைவிடப்படும் என அறிவித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். 

இரண்டு மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு ஒவ்வொரு பகுதியாக பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டதால், பகல் 12.30 மணிக்கு பிறகு சென்னை சாலை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com