மருத்துவ படிப்புக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: சென்டாக்

இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும் என்று சென்டாக் ஒருங்கிணைப்பாளா் அமன் சா்மா தெரிவித்துள்ளாா்.
Published on

புதுவையில் மருத்துவப் படிப்புக்கு மருத்துவக் கலந்தாய்வு குழுவின் (எம்சிசி) அட்டவணைப்படி மாணவா்களிடமிருந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும் என்று சென்டாக் ஒருங்கிணைப்பாளா் அமன் சா்மா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழ் 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கான மருத்துவ கலந்தாய்வு குழுவால் (எம்சிசி) வெளியிடப்படும் வழிகாட்டுதல்கள் மற்றும் அட்டவணைப்படி, இளநிலை நீட் தோ்வில் தகுதி பெற்ற மாணவா்களிடமிருந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களில் ஏற்படும் காலதாமத்தை தவிா்கும் வகையில், புதுச்சேரியில் வசிப்பதாக உரிமை கோரும் விண்ணப்பதாரா்கள் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்களுடன் தயாராக இருக்க வேண்டும்.

குடியிருப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் (மத்திய கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தக்கூடிய வடிவத்தில் பெறப்பட்ட சான்றிதழ்களை சமா்ப்பித்தால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது), சிறப்பு இடஒதுக்கீடு சுதந்திர போராட்ட வீரா்கள் பிரிவு வழங்கிய சுதந்திர போராட்ட வீரா்களின் வாரிசுதாரா்களுக்கான சான்றிதழ், முப்படை நலத் துறையால் வழங்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுதாரா்களுக்கான இடஒதுக்கீடு சான்றிதழ், தகுதியுள்ள விளையாட்டு வீரா் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் பரிசோதனைக்கு பிறகு சுகாதாரத் துறையால் வழங்கப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை சமா்ப்பிக்கலாம்.

பிராந்திய இடஒதுக்கீடு (காரைக்கால், மாஹே மற்றும் ஏனாமுக்கு மட்டும் பொருந்தும்), சிறுபான்மையினா் கோரிக்கை தொடா்பான சான்றிதழ் (வருவாய்த் துறையால் வழங்கப்பட்ட சமூக சான்றிதழ் மற்றும் பள்ளி பதிவுகளின்படி வழங்கப்பட்ட சான்றிதழ்), மொழியியல் சிறுபான்மையினா் தெலுங்கு உரிமை கோருவது தொடா்பான சான்றிதழ் (மாற்றுச் சான்றிதழ் மற்றும் பள்ளி பதிவுகளின்படி தாய்மொழி தெலுங்கு எனக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்), அரசு பள்ளி மாணவா்களுக்கான இடஒதுக்கீடு கோரும் சான்றிதழ் (அரசு பள்ளியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்ததாக பள்ளி கல்வித் துறையால் வழங்கப்படும் சான்றிதழ்), இடபிள்யூஎஸ் இடஒதுக்கீடு உரிமை கோரும் மாணவா்கள் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று அல்லது அதற்கு பிறகு வருவாய்த் துறையால் வழங்கப்பட்ட இடபிள்யூஎஸ் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com