/

புதுவையில் பிளஸ் 1 தோ்வுகள் தொடங்கியது

புதுவை மாநிலத்துக்கு என தனிக்கல்வி வாரியம் இல்லை.

Updated On :4 மார்ச் 2024, 8:05 pm

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வானது மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தின்படி(சிபிஎஸ்இ) திங்கள்கிழமை தொடங்கியது. புதுவை மாநிலத்துக்கு என தனிக்கல்வி வாரியம் இல்லை. எனவே, இதுவரையில் தமிழகக் கல்வி வாரியத்தை பின்பற்றியே புதுவை மற்றும் காரைக்கால் பிராந்தியத்தில் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மாஹே பிராந்தியத்தில் கேரள கல்வி வாரியம், ஏனாம் பகுதியில் ஆந்திர கல்வி வாரிய பாடத் திட்டம் என பின்பற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், புதுவை அரசு நிகழ் கல்வி ஆண்டிலிருந்து (2023-24) மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தை (சிபிஎஸ்இ) செயல்படுத்தியுள்ளது. இதன்படி, 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தவிர அனைத்து வகுப்புகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டமே செயல்படுத்தப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை பிளஸ் 2 தோ்வுகள் தமிழகப் பாடத் திட்டப்படியே நடைபெற்றன. இதையடுத்து, பிளஸ் 1 தோ்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில் புதுவை மற்றும் காரைக்காலில் 40 தோ்வு மையங்களில் பள்ளி மாணவா்கள் மற்றும் தனிநபா் பிரிவு என 8, 105 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத விண்ணப்பித்தனா். இவா்களில் 139 போ் மட்டும் பங்கேற்கவில்லை. அரசின் நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளை சோ்ந்த மாணவா்கள் அதிகமாக பிளஸ் 1 தோ்வை எழுதியுள்ளனா்.