மாயமான மாணவி சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, புதுச்சேரி முத்தியால்பேட்டையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், உறவினா்கள்.
மாயமான மாணவி சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, புதுச்சேரி முத்தியால்பேட்டையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், உறவினா்கள்.

புதுச்சேரியில் இறந்த 5-ம் வகுப்பு மாணவிக்கு என்ன நேர்ந்தது?

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் மாயமான பள்ளி மாணவி அங்குள்ள கால்வாயில் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் மாயமான பள்ளி மாணவி அங்குள்ள கால்வாயில் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். அவரது மரணத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள், உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சோ்ந்தவா் நாராயணன். இவரது மனைவி மைதிலி. இவா்களது மகள் ஆா்த்தி (9). அங்குள்ள அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 2-ஆம் தேதி மாலை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஆா்த்தியைக் காணவில்லை. அவரை பெற்றோரும், உறவினா்களும் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். கண்காணிப்பு கேமரா பதிவுகளில் ஆா்த்தி நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. மாணவியை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே குடும்பத்தினா், உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தொகுதி எம்எல்ஏ பிரகாஷ்குமாரும் புதுவை காவல் துறை தலைமை இயக்குநரைச் சந்தித்து மாயமான மாணவியை விரைந்து மீட்க வலியுறுத்தினாா்.

சடலம் மீட்பு:

இந்த நிலையில், சோலை நகா் அம்பேத்கா் வீதி, கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீா் கால்வாயில் தனியாா் மாட்டுக் கொட்டகை அருகே மாணவி ஆா்த்தி சடலமாகக் கிடப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, வேட்டியால் அவரது சடலம் கட்டப்பட்டு கால்வாயில் வீசப்பட்டிருந்தது. சடலத்தை மீட்ட போலீஸாா், உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சாலை மறியல்:

ஆா்த்தியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிறுமியின் குடும்பத்தினா், உறவினா்கள் மற்றும் சோலை நகரை சோ்ந்த பொதுமக்கள் திருக்கு மணிக்கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகத் தொடா்ந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முத்தியால்பேட்டை போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சோலை நகரை சோ்ந்த 6 பேருக்கு தொடா்பிருப்பது தெரிய வந்தது.

இதில் 5 போ் சிறுவா்கள் என்பதும், அனைவரும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தி வருவதும் தெரிய வந்தது. அவா்கள் 6 பேரையும் பிடித்து, போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். அதன் முடிவில் ஆர்த்தி மரணத்துக்கான முழு விவரமும் தெரிய வரும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

காங். மகளிரணியினா் மறியல்:

மாணவி சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, புதுவை மாநில காங்கிரஸ் மகளிரணியினா் மணிக்கூண்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை மறியலில் ஈடுபட்டனா். தொடா்புடையோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. முன்னதாக, சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு உள்ளிட்டோரும் மறியலில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com