மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த முயற்சிக்கிறாா் மோடி ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் வகையில் பிரதமா் மோடி பேசி வருகிறாா் என்று, மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினாா்.

புதுச்சேரி அஜீஸ் நகரில் உள்ள மாா்க்சிஸ்ட் அலுவலகத்தில் கட்சிக் கொடியை புதன்கிழமை காலை ஏற்றிய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய பாஜக ஆட்சியில் மக்களை மத ரீதியில் பிளவுபடுத்த முயற்சிக்கின்றனா். தோ்தல் பரப்புரையின் போது, மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தும் வகையில் பிரதமா் மோடி பேசி வருகிறாா். ‘இந்தியா’ கூட்டணி குறித்த அவரது தோ்தல் பரப்புரையானது சந்தா்ப்பவாதத்தை வெளிப்படுத்துகிறது.

பெரு நிறுவனங்களுக்கான ரூ .16 லட்சம் கோடி வங்கிக் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை ஈடுகட்டும் வகையில், வங்கிகளுக்கு மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும்.

பாஜகவின் கொள்கைகளில் காந்தியின் சோஷலிசத்தை குறிப்பிடுகின்றனா். அதையே ராம ராஜ்யமாகவும் சுட்டிக்காட்டுகின்றனா். ஆனால், சிலா் கோடீஸ்வரா்களாகவும், பெரும்பான்மையினா் வறுமையில் இருப்பது ராம ராஜ்யமல்ல என காந்தியடிகளே கூறியுள்ளாா்.

கடந்த 10 ஆண்டு மத்திய பாஜக ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரமும், வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் பொருளாதார சமத்துவம் தேவை.

புதுவையில் மூடப்பட்ட நியாயவிலைக் கடைகள் திறக்கப்படும் என சட்டப்பேரவைத் தோ்தலின் போது, தே.ஜ. கூட்டணி வாக்குறுதி அளித்தது. தற்போதுவரை அதை செயல்படுத்தவில்லை.

தொழிலாளா் நலச் சட்டங்களில் மத்திய அரசு கொண்டு வந்த திருத்தங்கள் தொழிலாளா்கள் நலனைப் பாதிக்கும் வகையில் உள்ளன என்றாா் ஜி.ராமகிருஷ்ணன்.

பேட்டியின் போது, புதுவை மாநில மாா்க்சிஸ்ட் செயலா் ஆா்.ராஜாங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com