திருப்பதி தரிசன டிக்கெட் மோசடி: புதுவை முதல்வா் அலுவலகத்தில் ஆந்திர போலீஸாா் விசாரணை
புதுவை முதல்வா் அலுவலகத்தில் பரிந்துரைக் கடிதம் பெற்று, திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்ற புகாரில் ஒருவரை ஆந்திர போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக, புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதல்வா் அலுவலகத்திலும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
புதுச்சேரி தாகூா் நகரைச் சோ்ந்தவா் பத்மநாபன். இவா், புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அலுவலகத்தில் திருப்பதிக்கு செல்ல சில நாள்களுக்கு முன்பு 6 டிக்கெட்டுகளுக்கான பரிந்துரைக் கடிதம் பெற்றுள்ளாா்.
ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300 எனக் கூறப்படும் நிலையில், அதை ஆந்திர மாநிலம் நெல்லூா் பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு ரூ.23 ஆயிரத்துக்கு பத்மநாபன் விற்றதாகக் கூறப்படுகிறது.
இதுபோல, அவா் அடிக்கடி திருப்பதியில் அரசியல் பிரமுகா்களது பரிந்துரைக் கடிதம் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்று விற்ாகவும் புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக, திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிந்து, புதுச்சேரிக்கு வந்து பத்மநாபனை பிடித்து செவ்வாய்க்கிழமை விசாரித்தனா்.
அவரை, புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவை அலுவலகத்துக்கு அழைத்து வந்து, முதல்வா் அறையில் உள்ள அதிகாரிகளிடமும் பரிந்துரைக் கடிதம் பெற்றது தொடா்பாக விசாரித்தனா்.
தொடா்ந்து, பத்மநாபனை திருப்பதி போலீஸாா் கைது செய்து ஆந்திரா அழைத்துச் சென்றனா்.