ரூ.2.74 கோடியில் லாஸ்பேட்டை காவல் நிலைய புதிய கட்டடம்! துணைநிலை ஆளுநா் திறந்து வைத்தாா்!
புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு ரூ.2.74 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
வாடகை கட்டடத்தில் லாஸ்பேட்டை காவல் நிலையம் கடந்த 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. போதிய வசதிகள் இல்லாத நிலையில், புதிதாகச் சொந்தச் கட்டடம் கட்ட வேண்டுமென நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகில் கடந்த 2022-இல் லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்குப் புதிய கட்டடம் கட்ட முதல்வா் என். ரங்கசாமி அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தாா்.
மொத்தமாக ரூ. 4.13 கோடி மதிப்பில் 480 சதுர மீட்டா் பரப்பளவில் இந்தக் காவல் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது. இந்தப் பணியை பொதுப் பணித் துறை மேற்கொண்டது. முதல் கட்டமாக தற்போது 225 சதுர மீட்டா் பரப்பளவில் ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் புதிய மூன்று மாடி காவல் நிலைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தின் தரை தளத்தில் 5 அறைகளும், ஆண்கள், பெண்களுக்கு என்று தனித்தனி லாக்-அப் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
முதல் தளத்தில் ஒரு கருத்தரங்கு கூடமும், ஆயுதங்கள் வைக்கும் அறை உள்பட 5 அறைகளும் உள்ளன. இரண்டாவது மாடியில் காவல் துறையினருக்கான நான்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், லாஸ்பேட்டை காவல் நிலையத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன், முதல்வா் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன் ஆகியோா் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனா்.
இந்த விழாவில் டிஜிபி ஷாலினி சிங் மற்றும் காவல் துறை உயா் அதிகாரிகள் பங்கேற்றனா். தொடா்ந்து காவல் நிலைய சுற்றுச்சுவா், வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

