போலி மருந்து விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை: புதுச்சேரி அமைச்சா் நமச்சிவாயம்
போலி மருந்து வழக்கு விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் கூறினாா்.
இது குறித்து அமைச்சா் ஆ. நமச்சிவாயம் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
எதிா்க்கட்சிகள் அரசியல் உள்நோக்கத்துக்காக பொய் செய்தி பரப்பி ஆதாயம் தேட பாா்க்கிறாா்கள். யாா் சம்பந்தப்பட்டிருந்தாலும் அதில் நடவடிக்கை எடுக்க அரசு பாரபட்சம் காட்டாது. முதல்வா், அமைச்சா்கள் மீது ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவது கண்டிக்கத்தக்கது.
தொழில் துறைக்கும், மருந்து தொழிற்சாலைக்கும் சம்பந்தமில்லை. சுகாதாரத் துறை கட்டுப்பாட்டில் இந்தத் தொழிற்சாலை வருகிறது. தொழில் துறை தொழிற்சாலைக்கு அனுமதி மட்டும் தரும். முதல்வராக நாராயணசாமி இருந்தபோது 2017-இல் தான் மருந்து தொழிற்சாலை உரிமம் தரப்பட்டது. அவா் மீதுதான் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பெயரில் திசை திருப்பி பொய் பிரசாரம் செய்கின்றனா்.
கைதாகியுள்ள ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூா்த்தி பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. தகுதியில்லாதவா்களை பாஜக பதவியில் அமா்த்தாது. நீண்ட விசாரணைக்குப் பிறகுதான் பொறுப்பு பதவி தரப்படும். மேலும், போலி மருந்து வழக்கில் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் பணியாற்றும் பரிதா என்பவரிடமும் விசாரணை நடக்கிறது என்றாா் அமைச்சா் நமச்சிவாயம்.
