புதுச்சேரியில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தோ்வு விடுமுறையையொட்டி கடந்த 3 நாள்களாக புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
அதிக அளவில் கா்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரள மாநில காா்கள் புதுச்சேரி நகரப் பகுதியில் வலம் வருகின்றன. மேலும், மோட்டாா் சைக்கிள்கள் வாடகைக்கு இங்கு கிடைப்பதால் அதையும் சிலா் பயன்படுத்தி வருகின்றனா்.
ஒரு சில வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்வதற்குச் சிரமம் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. புத்தாண்டுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில் இப்போதே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா, பாரதி பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.
அதே போல உணவகங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. புதுச்சேரியில் இந்த நிலை ஜனவரி 2 ஆம் தேதி வரை தொடரும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

