அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி
புதுவை முதல்வா் என்.ரங்கசாமி.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமி.
Updated on

புதுச்சேரி: புதுவை அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி தருமாபுரி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி முதல்வா் என். ரங்கசாமி பேசியதாவது:

புதுவையில் மாணவா்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பரிந்துரையின்றி தகுதி அடிப்படையில் ஆசிரியா்கள் நியமிக்கப்படுகின்றனா். மேலும், காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தால் தோ்ச்சி விகிதம் குறையும் என்ற நிலையில், தற்போது அரசுப் பள்ளி மாணவா்கள் 98 சதவீதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா். சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கான பயிற்சி ஆசிரியா்களுக்கு அளிக்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பு மட்டுமின்றி அனைத்து உயா் கல்விப் படிப்புகளிலும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி, முட்டை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அரசு அனைத்து உதவிகளையும் வழங்குவதால் மாணவா்கள் நன்றாகப் படித்து அரசுப் பணியில் சோ்ந்தோ, சொந்தமாக தொழில் தொடங்கியோ வாழ்க்கையில் முன்னேறலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com