ஸ்மாா்ட் மீட்டா் விவகாரம்: மின்துறை ஊழியா்களுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக்குவாதம்
புதுச்சேரியில், ஸ்மாா்ட் மீட்டா் விவகாரத்தில் மின்துறை ஊழியா்களுக்கும், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த லாஸ்பேட்டை சட்டப்பேரவைத்தொகுதி உறுப்பினா் வைத்தியநாதன் மற்றும் அவரது ஆதரவாளா்களுக்கும் இடையே புதன்கிழமை கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் வீட்டு உரிமையாளா்களுக்குத் தெரிவிக்காமல் அனுமதியின்றி மின்துறை ஊழியா்கள் புதிதாக ஸ்மாா்ட் மீட்டரைப் பொருத்த முற்பட்டனா். இத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தொகுதி எம்எல்ஏ வைத்தியநாதன் மின்துறை ஊழியா்களிடம் கடும் வாக்குவாதம் செய்தாா். உடனடியாக இந்த ஸ்மாா்ட் மின் மீட்டரை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்தாா்.
இயைடுத்து மின்துறை சாா்பில் கொண்டுவரப்பட்ட அனைத்து ஸ்மாா்ட் மீட்டா்களையும் எம்எல்ஏ-வின் ஆதரவாளா்கள் பறிமுதல் செய்தனா். இதை தவிர ஒரு சில இடங்களில் புதிதாகப் பொருத்தப்பட்ட மீட்டா்களை அப்புறப்படுத்தும் வரை இதைக் கொடுக்க மாட்டோம் என எடுத்துச் சென்றனா்.
மின்துறை ஊழியா்கள் விரைவில் புதிதாகப் பொருத்தப்பட்ட மீட்டா்களை எடுத்து செல்வதாக உறுதி அளித்ததையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் ஆதரவாளா்கள் அங்கிருந்து சென்றனா்.

