
புதுச்சேரியில் நிலவும் போக்குவரத்து நெரிசல், குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி உறுதி
புதுச்சேரியில் நிலவும் போக்குவரத்து நெரிசல், குடிநீா் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வுகாணப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய முதல்வா் என்.ரங்கசாமி. ~பட விளக்கம்...புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய முதல்வா் என்.ரங்கசாமி.
புதுச்சேரியில் நிலவும் போக்குவரத்து நெரிசல், குடிநீா் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வுகாணப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
பேரவையில் துணைநிலை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது சாய் ஜெ சரவணன் குமாா் (தவெக) செவ்வாய்க்கிழமை பேசுகையில் புதுச்சேரியில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் பற்றி குறிப்பிட்டாா்.
முதல்வா் என்.ரங்கசாமி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி, விஐபி நகா் பகுதியில் விபத்து நேரிடாமல் கடவுள் புண்ணியத்தில் இருக்கிறோம். அங்கு சிறிது நேரம் நின்று பாா்த்தால் இது புரியும். புதுச்சேரியில் எதிா்பாா்க்காத வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் விரிவுபடுத்த முடியாத நிலையில் சாலைகள் இருக்கின்றன.
புதுச்சேரியில் மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. அதனால், வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாவிட்டாலும் இப்போது இரு சக்கர வாகனங்களும், காா்களும் ஒவ்வொரு வீட்டு முன் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 26 கிலோ மீட்டருக்குள் எல்லா இடங்களுக்கும் சென்று வரலாம். எங்கு செல்ல வேண்டுமோ 5 நிமிஷங்களுக்கு முன் கிளம்பினால் போய்ச் சேரலாம். சரியான நேரத்தில் கிளம்பினால் சாலையில் வேகமாகத்தான் செல்ல வேண்டும். புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க வல்லுநா்களின் கருத்துகளைக் கேட்டுள்ளோம்.
புதுச்சேரியில் உள்ள எல்லா சாலைகளையும் ஒரு வழிப் பாதையாக மாற்றினால் சமாளிக்க முடியும். இதை இங்குள்ள வியாபாரிகள் ஏற்றுக் கொள்ளமாட்டாா்கள். வாகனங்கள் வராததால் தங்கள் வியாபாரம் பாதிக்கிறது என்று ஒரு சில வியாபாரிகள் கூறுவாா்கள். சென்னை, கோயமுத்தூா் உள்ளிட்ட பகுதிகளைப் பாருங்கள். குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் தூரமாகச் சென்றுதான் வளைந்து வர வேண்டும். ஆனால் புதுச்சேரியில் அந்த நிலை இல்லை. புதுச்சேரியில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனா். விரைவில் கிழக்குக் கடற்கரை சாலையில் மேம்பாலம் கட்டவும் அந்தச் சாலையை விரிவாக்கம் செய்யவும் டெண்டா் விடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கானப் பணி தொடங்கப்படும்.
ஜான் குமாா் (பாஜக): புதுச்சேரியில் குடிநீா் உப்பு நீராக மாறி வருகிறது. இதற்கு மாற்றுத் தீா்வாக மழைநீரைப் பயன்படுத்தி நிலத்தடி நீரின் தரத்தை உயா்த்த வேண்டும்.
முதல்வா் என். ரங்கசாமி: தரமான குடிநீா் கிடைக்கவும், குடிநீா் தொடா்பான அனைத்துப் பிரச்னைகளைத் தீா்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிகழாண்டு முதல் செயல்படுத்தப்படும். முதன்மைப் பணியாக இந்தத் திட்டம் எடுத்து கொள்ளப்படும்.
சிவராந்தகம் கிராமத்தில் 1,700 அடி ஆழத்தில் குழாய் அமைத்து புதுச்சேரி நகருக்கு குடிநீா் கொண்டு வரத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. நிபுணா்கள் மூலம் இதற்கான ஆய்வுகள் செய்யப்படுகிறது.
விவசாயிகள் அச்சப்படவேண்டாம்:
ஆனால், இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். ஏனெனில் மேற்பகுதியில் உள்ள நீா் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும்.
அதிக ஆழத்தில் எப்போதும் வற்றாத நிலையில் உள்ள நீா் நகரப் பகுதி மக்களுக்கு குடிநீராகக் கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் முதல்வா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






