காங்கிரஸின் புதுச்சேரிக்கான நடைபயண பாடல், பிரசுரம் வெளியீடு
என்.ஆா். காங்கிரஸ் -பாஜக கூட்டணி ஆட்சியை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் ஜன. 21 ஆம் தேதி முதல் புதுச்சேரிக்கான நடைப்பயணம் தொடங்குகிறது. இதற்காக பாடல், மக்களிடம் கொடுக்க துண்டு பிரசுரங்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இவற்றை வெளியிட்டு காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த யாத்திரை வெறும் நடைபயணம் அல்ல. மக்களைப் பாதுகாக்கும் பயணம். புதுச்சேரிக்கான நடைபயணம். புதுச்சேரிக்கு விடிவு காலத்தை நோக்கிய பயணம். இந்த ஆட்சியில் ஏழைகளுக்கு, இயலாதோருக்கு 100 நாள் வேலை கிடைக்கவில்லை. இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கவில்லை. போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. இதையெல்லாம் நடைபயணத்தில் எடுத்துக் கூறுவோம்.
புதுச்சேரியை ஆள வேண்டும் என்று மதவாத சக்தியும், எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்ற சக்தியும், லாட்டரி சாம்ராஜ்ஜியத்தை நிறுவன வேண்டும் என மூன்று சக்திகள் போட்டிப் போடுகின்றன. இதெல்லாம் மக்களுக்குத் தெரியும். இருப்பினும் மக்களிடம் இது தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில்தான் இந்த நடைபயணம் இருக்கும்.
மேலும், இப்போது ஆளும் கூட்டணி அரசின் முறைகேடுகள், ஊழல்கள் அடங்கிய கையேடுகள் தயாரிக்கப்பட்டு மக்களிடம் வழங்கப்படும். மேலும், புதுவை தாத்தா என்ற செயலியை காங்கிரஸ் சாா்பில் அங்கீகரிக்கிறோம். அந்தச் செயலியில் மக்களின் பிரச்னைகள் தொடா்ந்து எடுத்துக் கூறப்படும் என்றாா் வைத்திலிங்கம்.
பேட்டியின்போது முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, மு. வைத்தியநாதன், முன்னாள் அரசு கொறடா ஆா்.கே.ஆா். அனந்தராமன், மாநில நிா்வாகி இளையராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

