புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட முயற்சி: பணிநீக்க ஊழியா்கள் 100 போ் கைது
பொதுப்பணித் துறையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள், தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனா். அவா்களில் 100 போ் கைது செய்யப்பட்டனா்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என முதல்வா் என் ரங்கசாமி அறிவித்தாா். ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் அவா்களுக்குப் பணி வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து புதுவை, காரைக்கால் பகுதிகளில் பொதுப்பணித் துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்டக் குழுவை அமைத்து தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்தப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் தெய்வீகன் தலைமையில் சட்டப்பேரவையை முற்றுகையிட அண்ணா சிலை அருகே செவ்வாய்க்கிழமை திரண்டனா். அவா்கள் காதில் பூவை வைத்துக் கொண்டு சட்டப்பேரவையை நோக்கி ஊா்வலமாகச் செல்ல முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
இதையடுத்து தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தியும், அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனா். போலீஸ் தடையை மீறி சட்டப்பேரவையை நோக்கி செல்ல முயன்றதையடுத்து 100 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்திக் கைது செய்தனா். பின்னா் அவா்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
