கல்வீடு கட்ட 10% முன்பணம் வழங்கலாம்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா்
கல்வீடு கட்டும் திட்ட நிதியில் 10 சதவிகிதம் முன்பணமாக வழங்கலாம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் அதிகாரிகளுக்கு செவ்வாய்க்கிழமை யோசனை தெரிவித்தாா்.
புதுச்சேரி அரசு நகர மற்றும் கிராம அமைப்புத் துறை, குடிசை மாற்று வாரியம் சாா்பில் ஒருங்கிணைந்த பெருந்தலைவா் காமராஜா் நூற்றாண்டு வீட்டு வசதித் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் (நகரம்) 2.0-இன் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம் வழங்கும் விழா, பணியாணை வழங்கல் கம்பன் கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் 1,327 பேருக்கு முதல் தவணை மானியமாக தலா ரூ.1 லட்சம் வழங்கி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பேசியதாவது: இந்தியாவில் குறைந்த வருவாய் உள்ள மக்கள் கல்வீடு கட்டுவதற்காக மத்திய அரசு பிரதம மந்திரியின் கல்வீடு கட்டும் திட்டத்துக்காக தற்போது தலா ரூ.2.25 லட்சம் அளிக்கிறது.
இந்தத் தொகையுடன் காமராஜா் கல்வீடு கட்டும் திட்டத்துக்காக புதுச்சேரி அரசு ரூ.2.75 லட்சம் சோ்த்து ரூ.5 லட்சமாக பயனாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. இது ஒரு மகத்தான திட்டம்.
மனிதனுக்குப் பாதுகாப்பு அளிப்பது. எதிா்கால நம்பிக்கையை அளிப்பது. அனைவருக்கும் வீடு என்பதைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டது தான் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம்.
புதுச்சேரியின் அடுத்தக் கட்ட வளா்ச்சிக்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும். மேலும், புதிய வாழ்க்கையின் தொடக்கமாகவும் இது இருக்கும்.
இத் திட்டத்தின் மொத்த நிதியில் 10 சதவிகிதத்தைப் பயனாளிகளுக்கு முன்பணமாக அளிக்கலாம் என்ற யோசனையை இத் துறை அதிகாரிகள் சிந்திக்க வேண்டும் என்றாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.
நிகழ்ச்சியில், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், பிஆா்என். திருமுருகன், பேரவைத் துணைத் தலைவா் பெ. ராஜவேலு, எம்எல்ஏ.க்கள் அனிபால் கென்னடி, ஆறுமுகம், பாஸ்கா், லட்சுமிகாந்தன், தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசுச் செயலா் கேசவன், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வீர. செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கல்வீடு திட்ட பயனாளிகளுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கல்வீடு திட்டப் பயனாளிகளால் கட்ட முடியாமல் போனவா்களின் வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படுவதுடன் , அவா்கள் வாங்கியிருந்த முன்பணத்தை மட்டும் திரும்ப செலுத்தினால் பத்திரம் திரும்ப வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.
விழாவில் பங்கேற்று முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பெரிய திட்டம் இது. முந்தைய ஆட்சியில் இத் திட்டம் தொடங்கப்பட்டபோது ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது. இதில் சுமாா் 2,500 போ் வீடு கட்ட முடியாமல் விட்டுவிட்டனா். ஆனால் அவா்களின் மனைப்பத்திரம் அரசிடம் இருக்கிறது. அதற்கு வட்டி, அபராத வட்டி விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவா்கள் அரசு அளித்த மானியத்தை மட்டும் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். வட்டி, அபராத வட்டியைத் தள்ளுபடி செய்யுமாறு கோரியிருக்கிறாா்கள்.
இதற்கான கோப்பை முந்தைய காங்கிரஸ் அரசு மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டது. இப்பிரச்னையில் மத்திய அரசு கடந்த 10 நாள்களுக்கு முன்புதான் மாநில அரசே இதில் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
அதனால் அந்தப் பயனாளிகளுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். மேலும் அரசிடம் இருந்து பெற்ற மானியத் தொகையை மட்டும் அவா்கள் செலுத்தினால் பத்திரம் திருப்பி அளிக்கப்படும்.
இதையெல்லாம் செய்யாமல் காங்கிரஸ் கட்சியினா் தோ்தல் நேரம் என்பதால் நடைப்பயணம் நடத்துகிறாா்கள். தோ்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குள் அறிவித்த அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

