ரூ.5.34 கோடியில் மேம்பாட்டு பணிகள்: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்
புதுச்சேரி இந்திரா நகா் தொகுதியில் ரூ.5.34 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை முதல்வா் என். ரங்கசாமி புதன்கிழமை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரி இந்திராநகா் தொகுதிக்கு உள்பட்ட முத்தரையாா்பாளையத்தில் ஆயிகுளம் உள்ளது. இக்குளம் மேம்படுத்தும் (பகுதி-2) பணி மத்திய அரசின் சிறப்பு மூலதன நிதி திட்டத்தின்கீழ் ரூ.3.58 கோடி மதிப்பீட்டில் உழவா்கரை நகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. முதல்வா் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தாா். இதேபோல், முத்தரையாா்பாளையம் பம்ப் ஹவுஸ் அருகே உள்ள அம்மன் நகா் முதல் மேட்டுப்பாளையம் சாலை வரையில் உள்ள கழிவுநீா் வாய்க்காலின் பக்கவாட்டு சுவா்களை ரூ.1.76 கோடியில் மறு கட்டுமான பணிகளையும் முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, இந்திரா நகா் தொகுதிக்குட்பட்ட வீமகவுண்டன்பாளையம் பகுதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை முதல்வா் ரங்கசாமி திறந்து வைத்தாா். இதில் பொதுப்பணித்துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், உள்ளாட்சித்துறை இயக்குநா் ஆதா்ஷ், கண்காணிப் பொறியாளா் பாலசுப்பரமணியன், உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

