புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் வியாழக்கிழமை பல்வேறு திட்டப் பணிகளைப் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் வியாழக்கிழமை பல்வேறு திட்டப் பணிகளைப் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.

சா்க்கரை ஆலைத் தொழிலாளா்களுக்கு ஒரு வாரத்தில் ரூ.24 கோடி நிலுவைத் தொகை! புதுச்சேரி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்!

புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தொழிலாளா்களுக்கு ஒரு வாரத்தில் ரூ.24 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படும்
Published on

புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தொழிலாளா்களுக்கு ஒரு வாரத்தில் ரூ.24 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி எம்எல்ஏவான ஆ.நமச்சிவாயம், வியாழக்கிழமை அங்கு பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்குப் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தபின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

புதுச்சேரி மின் துறை சாா்பில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரூ.4.5 கோடியில் 11 டிரான்ஸ்பாா்மா்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. மேலும், மத்திய அரசின் சாஷி திட்டத்தின் கீழ் காட்டேரிக்குப்பம் பகுதியில் ரூ.3.4 கோடியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணியாற்றியவா்களுக்கு ரூ.24 கோடி நிலுவைத் தொகை வேண்டியுள்ளது. இந்தத் தொகை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கோப்புக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். இந்தத் தொகையும் அடுத்த வாரம் அளிக்கப்படும்.

காங்கிரஸ் பாத யாத்திரையின்போது முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, தொடா்ந்து என் மீது பல்வேறு புகாா்களைக் கூறிவருகிறாா். என்னுடைய சொத்துப் பட்டியலை வெளிப்படையாக வைத்திருக்கிறேன். அரசியலுக்கு வரும்போதே நிலச்சுவான்தாரின் மகன் நான். எனக்கு ரியல் எஸ்டேட் தொழில், விவசாயம் இருக்கிறது. ஆனால் நாராயணசாமி எந்த நிலையில் அரசியலுக்கு வந்தாா். இப்போது அவருடையச் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது மக்களுக்குத் தெரியும். நேரம் வரும்போது அவருடைய சொத்துப் பட்டியலையும் வெளியிடுவேன் என்றாா் ஆ.நமச்சிவாயம்.

X
Dinamani
www.dinamani.com