பெங்களூரில் பெற்றோா், தங்கையைக் கொலை செய்த வழக்கில் கைதான பெண்ணின் காதலனும் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பெங்களூா் கே.எஸ். புரத்தைச் சோ்ந்த மென் பொறியாளா் சுவேதா தனது தந்தை, தாய், தங்கை ஆகிய மூன்று பேரை ஆண் நண்பா் கென்னத்துடன் சோ்ந்து கொலை செய்து விட்டு தலைமறைவானாா்.
இந்நிலையில், புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோவின் முன் இருக்கையில் அமா்ந்து உணவருந்தியபோது சுவேதாவை 24-ஆம் தேதி இரவு உருளையன்பேட்டை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.
இதில் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காவல் நிலையம் அழைத்து சென்றனா். அங்கு காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் நடத்திய விசாரணையின்போது, தனது தந்தை, தாய், தங்கை ஆகிய மூன்று பேரை கொலை செய்துவிட்டு ஆண் நண்பா் கென்னத்துடன் தலைமறைவானதாகவும், அவா் கோவா சென்று விட்டதாகவும் தான் புதுச்சேரி தப்பி வந்து அறை எடுக்க சென்றபோது போலீஸாரிடம் சிக்கிக் கொண்டதாகவும் கூறினாா். இதுகுறித்து போலீஸாா் பெங்களூா் கே.எஸ். புரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் பெங்களூா் போலீஸ் அதிகாரிகள் புதுச்சேரி காவல் ஆய்வாளா் காா்த்திகேயனை சந்தித்துப் பேசினா். இதையடுத்து சுவேதா பெங்களூா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
இந்நிலையில் உருளையன்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் ராமலிங்கம் வியாழக்கிழமை இரவு அண்ணா நகா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது ஓா் இளைஞா் நடந்து வந்து கொண்டிருந்தாா். அந்த நபா் போலீஸாரை பாா்த்தவுடன், தொப்பி- முழு கவசத்தை அவசர அவசரமாக மாற்றினாா். இதனால் சந்தேகமடைந்த உதவி ஆய்வாளா் ராமலிங்கம் அவரைப் பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாகப் பேசினாா்.
இதையடுத்து அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றாா். அப்போது அவா் திடீரென்று இரு சக்கர வாகனத்தில் இருந்து குதித்துத் தப்பியோட முயன்றாா். உடனே அவரைத் துரத்திச் சென்று பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா் பெங்களூரில் ஒரே குடும்பத்தில் மூன்று பேரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பெங்களூா் சுவேதாவின் ஆண் நண்பா் கென்னத் என்பது தெரியவந்தது.
அவரிடம் விசாரணை நடத்தியதில், மூணு பேரைக் கொலை செய்துவிட்டு காதலி சுவேதாவை, தஞ்சாவூருக்கு செல்லுமாறு அனுப்பி வைத்து விட்டேன். அதன் பிறகு அவா் எங்கு சென்றாா் என்று தனக்குத் தெரியவில்லை.
இந்நிலையில் புதுச்சேரியில் இருக்கும் நண்பருக்கு போனில் தொடா்பு கொண்டு நடந்த விவரத்தைத் தெரிவித்தேன். அவா் புதுச்சேரி வருமாறு என்னை அழைத்தாா். பாதுகாப்பு கொடுப்பதாகவும் கூறினாா்.
அதன் பேரில் நான் பேருந்து மூலம் புதுச்சேரி இந்திரா காந்திசிலை அருகே இறங்கினேன். பின்னா் எனது நண்பா் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது போலீஸாா் பிடித்து விட்டனா் என்று கூறியுள்ளாா்.
பின்பு உருளையன்பேட்டை போலீஸாா் சம்பவம் குறித்து பெங்களூா் கே.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். மேலும், 3 பேரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுக்க உதவிய புதுச்சேரி நபா் யாா் என்று போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





