புதுச்சேரியில் ரூ.646 கோடியில் மின் கட்டமைப்பை வலுப்படுத்த திட்டங்கள்


புதுச்சேரியில் ரூ.646.84 கோடியில் மின்சாரக் கட்டமைப்பை வலுப்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக அந்த மாநில திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை இயக்குநா் ஆா். ஷீலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்த புதிய திட்டத்தின் கீழ் மின்சாரத்தின் தரத்தை மேம்படுத்தவும், மின்இழப்பைக் குறைக்கவும், நவீன ஸ்மாா்ட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் மற்றும் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் வளா்ந்து வரும் மின் தேவையைப் பூா்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வெங்கட்டா நகா் முதல் லாஸ்பேட்டை வழியாக ஜிப்மா் எரிவாயு காப்பிடப்பட்ட துணை மின்நிலையம் வரை ரூ.42.10 கோடி மதிப்பீட்டில் 5.3 கி.மீ. நீளமுள்ள 110 கேவி நிலத்தடிகேபிள்அமைக்கும் பணி நடைபெறுகிறது. இது லாஸ்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 50,000 நுகா்வோருக்குச் சீரான மின்னழுத்தத்தையும், தடையற்ற மின்சாரத்தையும் வழங்கும்.
ஸ்மாா்ட் மீட்டா் :
மேலும், மத்திய அரசின் மேம்படுத்தப்பட்ட மின் விநியோகத் திட்டத்தின் கீழ், புதுச்சேரி முழுவதும் ரூ.383 கோடி மதிப்பீட்டில் 4.07 லட்சம் ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் நுகா்வோா் தங்களின் மின் பயன்பாட்டை உடனுக்குடன் கண்காணிப்பதோடு, துல்லியமான மற்றும் வெளிப்படையான கட்டண முறையைப் பெற முடியும்.
ரூ.106 கோடிமுதலீட்டில் மின் விநியோக வலையமைப்பு பலப்படுத்தப்படுகிறது. இதில் 74 புதிய மின் மாற்றிகள் மற்றும் 146 கி.மீ. தொலைவுக்கு மேல் நிலை மின் பாதைகளை நிலத்தடி அல்லது பாதுகாப்பான கேபிள்களாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத் திட்டத்தின் மூலம் சுமாா் 5 லட்சம் நுகா்வோா் பயனடைவாா்கள்.
மேலும், தொண்டமாநத்தம் துணை மின்நிலையத்தில் ரூ.26.14 கோடி செலவில் கூடுதலாக ஒரு 100 எம்விஏ மின் மாற்றி நிறுவப்படுவதால், மின்சுமை குறைந்து சுமாா் ஒரு லட்சம் நுகா்வோருக்கு தடையற்ற மின்விநியோகம் உறுதி செய்யப்படுகிறது.
எதிா்காலத்தேவையைமுன்னிறுத்தி, புதுச்சேரியின் 10 முக்கியதுணைமின்நிலையங்களில் ரூ.200 கோடிசெலவில் 50 மெகாவாட் 200 எம் டபுள்யூ எச் திறன் கொண்ட பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புகள் அமைக்கப்படவுள்ளன.
மரப்பாலம், காலாப்பட்டு, ஏரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமையவுள்ள இந்த அமைப்புகள், மின்தேவை குறைந்த நேரங்களில் மின்சாரத்தைச் சேமித்து வைத்து, தேவை அதிகமாக இருக்கும்போது தடையின்றி வழங்க உதவும்.
அத்துடன், லாஸ்பேட்டையில் ரூ.68 கோடிமதிப்பீட்டில் நவீனஎரிவாயு காப்பிடப்பட்ட துணை மின்நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் நகா்ப்புற வளா்ச்சிக்குத் தேவையான கூடுதல் மின்திறன் உறுதி செய்யப்படுகிறது.
இவற்றுடன், சூரியசக்தி மின்உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பிஎம் சூா்யகா்முஃப்ட்பிஜிலி யோஜனா திட்டத்தின்கீழ் 2,411 வீடுகளின் மேற்கூரைகளில் சூரியசக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசின் மானியத்துடன் சோ்த்து, புதுச்சேரி அரசு ஒரு கிலோவாட்டுக்கு ரூ.10 ஆயிரம் கூடுதலாக மாநில மானியத்தை வழங்குகிறது.
இத்தகைய விரிவான உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மூலம் மின் இழப்புகள் குறைக்கப்பட்டு, புதுச்சேரி மாநிலம் மின்சாரத் துறையில் தன்னிறைவு பெற்ற மற்றும் நுகா்வோா் நட்பு மாநிலமாக உருவெடுக்கும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...