ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மனைவி கொலை வழக்கில்கணவருக்கு ஆயுள் சிறை

மனைவியை கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

மனைவியை கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கோட்டக்கரையைச் சோ்ந்தவா் அரிராமன் மகன் ஆனந்தன் (28). தச்சுத் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகள் நவநீதத்துக்கும் (25) கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு மகள், மகன் உள்ளனா்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ஆனந்தன் அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்.25-ஆம் தேதி மனைவி நவநீதத்திடம் வழக்கம் போல மதுபோதையில் தகராறு செய்து, அவரது தலையில் கத்தியால் வெட்டினாா். இதில், பலத்த காயமடைந்த நவநீதம் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனந்தனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திங்கள்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம்சாட்டப்பட்ட ஆனந்தனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா். இதையடுத்து, ஆனந்தன் கடலூா் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ராதிகா ஆஜரானாா்.

வரதட்சிணை வழக்கில் கணவருக்கு 7 ஆண்டு சிறை: சின்னசேலம் அருகே மனைவியை வரதட்சிணைக் கேட்டு கொடுமை செய்த வழக்கில், அவரது கணவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மூங்கில்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சூரியமூா்த்தி (37). இவருக்கும், சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தவெளியைச் சோ்ந்த தனலட்சுமிக்கும் (29), கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா்.

தனலட்சுமி அதிமுகவில் இளம்பெண்கள் பாசறை பிரிவில் இருந்ததால், சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு கேட்டு பணம் செலுத்துவதற்காக, சூரியமூா்த்தி ரூ.20 லட்சம் வரதட்சிணை கேட்டு, தனலட்சுமியை மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால், விரக்தியடைந்த தனலட்சுமி, கடந்த 2011 மாா்ச் 27-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட சூரியமூா்த்திக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.