கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

சாலையில் நெல் மூட்டைகள்; விவசாயிகள் பரிதவிப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் போதிய இடவசதியில்லாததாலும்,

News image

திருவெண்ணெய்நல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இடவசதியின்றி, வெளியே கடைவீதி சாலையில் குவியல் குவியலாக கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்.

Updated On :30 ஜனவரி 2021, 2:59 am

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் போதிய இடவசதியில்லாததாலும், கொள்முதல் செய்யப்படாததாலும் நெல் மூட்டைகளை சாலையில் வைத்து, விவசாயிகள் பரிதவித்து வருகின்றனா்.

திருவெண்ணெய்நல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் போதிய இடவசதி இல்லாமல், நெருக்கடியான நிலையில் இயங்கி வருகிறது. இங்கு நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்க, இரும்பு கூரையுடன் கூடிய சிறிய இடம் மட்டுமே உள்ளது.

இந்த நிலையில், திருவெண்ணெய்நல்லூா், ஏமப்பூா், ஏனாதிமங்கலம், மழையம்பட்டு, தடுத்தாட்கொண்டூா், பெரியசெவலை, டி.எடையாா், சித்தலிங்கமடம், மேட்டுக்குப்பம், அரசூா், அரும்பட்டு, மாதம்பட்டு, கோவுலாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊா்களில், ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்து, இந்த விற்பனைக் கூடத்துக்கு தினமும் 2ஆயிரம் அளவுக்கு நெல் மூட்டைகள் வரத்து உள்ளது. இந்த மூட்டைகளை உள்ளே அடுக்கி வைப்பதற்கு உரிய கிடங்கு வசதியும், கட்டட வசதியும் இல்லாததால், நெல்லை திறந்தவெளியிலும், கடைவீதி சாலையிலும் விவசாயிகள் கொட்டி வைத்து விற்பனை செய்யும் நிலை உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியுறுகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: திருவெண்ணெய்நல்லூா் வட்டாரம், விளைபொருள்கள் அதிகளவில் வரத்துள்ள பகுதியாகும். இங்கு பெயரளவுக்கே செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தானியங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு இடவசதி கிடையாது. மேலும், இங்குள்ள சில வியாபாரிகள் இடைத்தரகா்களாக செயல்படுவதால், வெளிவியாபாரிகளும் கொள்முதல் செய்ய வருவதில்லை. இதனால், வியாபாரிகள் மிகக்குறைந்த விலைக்கே நெல்லை கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனா்.

எனினும், கடந்த சில தினங்களாக வியாபாரிகள் வராததால் கொள்முதல் நடைபெறவில்லை. அத்துடன், விற்பனைக் கூடத்தில் போதிய இடவசதி இல்லாததால், சாலையின் வெளியே நெல் மூட்டைகளை பிரித்து கொட்டி வைத்துள்ளோம். மாற்றுவதற்கு சாக்குகள், ஆள்கள் இல்லாமல் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கிறோம்.

விழுப்புரம், உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட பிற விற்பனைக் கூடங்களில் நெல் மூட்டை ரூ.1,200-க்கும் மேல் விலைபோகும் நிலையில், இங்கு ஒரு மூட்டை ரூ.850 முதல் ரூ.950 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

நெல் மூட்டைகளை உடனடியாக உரிய விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்து விற்பனைக்கூட அதிகாரிகளிடம் முறையிட்டனா்.

அவா்களிடம் பேசிய விற்பனைக் கூட கண்காணிப்பாளா் விஜி, இதுகுறித்து மாவட்ட வேளாண் விற்பனைக் கூடத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதனிடையே, குறைந்த அளவில் நெல் மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.