விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி வெட்டிக்கொலை: இளைஞர் கைது

விக்கிரவாண்டி அருகே தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறி பிரச்னை செய்து, செவிலியர் மாணவியை வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி வெட்டிக்கொலை: இளைஞர் கைது

விக்கிரவாண்டி அருகே தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறி பிரச்னை செய்து, செவிலியர் மாணவியை வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், ராதாபுரம் காலனி, பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த சுதன் மகள் தரணி (18). இவர் விழுப்புரம் கே.கே.சாலையிலுள்ள தனியார் மருத்துவப் பயிற்சி நிலையத்தில் செவிலியர் பட்டயப் படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இவரும், விக்கிரவாண்டி அருகிலுள்ள மதுரப்பாக்கம் காலனி, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வரதராஜ் மகன் கணேஷ் ராஜும் (23) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 மாதங்களாக கணேஷ் ராஜுடன் பேசுவதை தரணி தவிர்த்து வந்தாராம். தெலங்கானா மாநிலம், கரீம் நகரிலுள்ள கிரானைட் குவாரியில் கல் அறுக்கும் வேலை செய்து வந்த கணேஷ்ராஜ், கடந்த 14- ஆம் தேதி சொந்த ஊர் வந்தார். வெள்ளிக்கிழமை காலை தரணியின் வீட்டுக்குச் சென்ற கணேஷ்ராஜ், அவரை வெளியே வருமாறு கூறி அழைத்துள்ளார். இதைத் தொடர்ந்து வெளியே வந்த தரணியிடம், மீண்டும் தன்னை காதலிக்குமாறு கூறி கணேஷ்ராஜ் பிரச்னை செய்தார்.

இதற்கு தரணி மறுப்புத் தெரிவித்தார். அப்போது அங்கு வந்த தரணியின் தாய் செல்லியம்மாள், பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரையும் கொலை செய்து விடுவதாகவும் கணேஷ்ராஜ் மிரட்டியுள்ளார். தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த கணேஷ்ராஜ், தான் கொண்டு வந்திருந்த கொடுவா கத்தியால் தரணியின் பின்பக்கத் தலை, பின்கழுத்து, இடது காது ஆகிய பகுதிகளில் வெட்டினார். இதில் பலத்த காயங்களுடன் தரணி கீழே சரிந்து விழுந்து, நிகழ்விடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் விநாயகமுருகன் தலைமையிலான போலீஸார் நிகழ்விடம் சென்று, தரணியின் உடலைக்  கைப்பற்றினர். மேலும் வழக்குப் பதிந்து, கணேஷ்ராஜை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com