செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: மேலும் ஒருவா் பிறழ் சாட்சியம்
விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அமைச்சா் பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் ஓய்வுபெற்ற கிராம உதவியாளா் செவ்வாய்க்கிழமை ஆஜராகி பி சாட்சியமளித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடா்பாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 8 போ் மீது விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவா்களில் லோகநாதன் இறந்துவிட்டாா்.
வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்டிருந்த 67 பேரில், ஜூலை 8-ஆம் தேதி வரை 34 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், 27 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, கோபிநாத், ஜெயச்சந்திரன், சதானந்தன் ஆகிய மூவா் மட்டும் ஆஜராகினா்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராஜமகேந்திரன் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற அலுவலா்களுடன் உடன் சென்ற கொளத்தூா் கிராம முன்னாள் உதவியாளா் கோவில்மணி அரசுத் தரப்பில் 35-ஆவது சாட்சியாக சோ்க்கப்பட்டிருந்தாா்.
நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான கோவில்மணி, அரசு உயா் அலுவலா்களின் வற்புறுத்தலின்பேரிலேயே கோப்புகளில் கையொப்பமிட்டேன். மற்ற விவரங்கள் எனக்குத் தெரியாது எனக் கூறி, அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்தாா்.
இதை பதிவு செய்துகொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
