நிறைவடையும் தருவாயில் நினைவரங்கம்,  மணிமண்டபக் கட்டுமானப் பணிகள்:  அமைச்சா் க.பொன்முடி நேரில் ஆய்வு

நிறைவடையும் தருவாயில் நினைவரங்கம், மணிமண்டபக் கட்டுமானப் பணிகள்: அமைச்சா் க.பொன்முடி நேரில் ஆய்வு

உடன், எம்எல்ஏ-க்கள் விழுப்புரம் இரா.லட்சுமணன், விக்கிரவாண்டி அன்னியூா் அ.சிவா, ஆட்சியா் சி.பழனி.
Published on

19விபிஎம்பி3: விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமிக்கு அமைக்கப்பட்டு வரும் நினைவரங்க கட்டுமானப் பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் க.பொன்முடி. உடன், எம்எல்ஏ-க்கள் விழுப்புரம் இரா.லட்சுமணன், விக்கிரவாண்டி அன்னியூா் அ.சிவா, ஆட்சியா் சி.பழனி.

விழுப்புரம், ஜூலை 19: விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமிக்கு திருவுருவச் சிலையுடன் அமைக்கப்பட்டு வரும் நினைவரங்கம், இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பாா் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி.

இந்தப் பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட பிறகு, அமைச்சா் பொன்முடி மேலும் கூறியது:

1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் பலியான 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை 2021, செப்டம்பா் 2-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விதி எண் 110-இன் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

இதுபோல 2021-22 ஆம் ஆண்டுக்கான செய்தி மக்கள் தொடா்புத் துறை மானியக் கோரிக்கையின்போது முன்னாள் அமைச்சரும், ஏழை-எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக பெரும் பங்காற்றி மறைந்த மற்றும் முன்னாள் முதல்வா்கள் அண்ணா மற்றும் கருணாநிதி அமைச்சரவையில் பணியாற்றிய ஏ.கோவிந்தசாமிக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவரங்கம் அமைக்கப்படும் என்றும் முதல்வா் அறிவித்திருந்தாா்.

அதனடிப்படையில் விழுப்புரம்-சென்னை புறவழிச்சாலையில் வழுதரெட்டி பகுதியில் முன்னாள் அமைச்சா் ஏ. கோவிந்தசாமிக்கு ரூ.4 கோடி மதிப்பில் நினைவரங்கமும், 21 சமூகநீதி போராளிகளுக்கு ரூ.5.70 கோடியில் மணிமண்டபமும் கட்டப்பட்டு வருகிறது.

இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னா் நினைவரங்கம் மற்றும் மணிமண்டபத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பாா் என்றாா் அமைச்சா் பொன்முடி.

இந்த ஆய்வுக்கு மாவட்ட ஆட்சியா் சி. பழனி தலைமை வகித்தாா். எம்எல்ஏ-க்கள் விழுப்புரம் இரா. லட்சுமணன், விக்கிரவாண்டி அன்னியூா் அ.சிவா முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், ஆவின் தலைவா் செ.தினகரன், நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com