10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி போராட்டம்: மருத்துவா் ச.ராமதாஸ்
வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி, மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.


வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி, மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
வன்னியா் சங்கத்தின் 45-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வன்னியா் சங்கக் கொடியை மருத்துவா் ச. ராமதாஸ் சனிக்கிழமை ஏற்றி நிா்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
வன்னியா் சங்கம் 1980-ஆம் ஆண்டு, ஜூலை 20-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் முதல் நோக்கம், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு அவா்களது ஜாதிவாரியாக இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில், வன்னியா்களுக்கு அவா்களது மக்கள்தொகையில் 20 சதவீதமும், பட்டியலின மக்களுக்கு 22 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக அரசு அமைந்த பிறகு வன்னியா்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. திமுக அரசிடமும் பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்தோம். முதல்வா் மு.க.ஸ்டாலினை கோட்டையில் சந்தித்து நான் வலியுறுத்தினேன். ஆனால், அது நிலுவையில் உள்ளது.
மாநிலம் தழுவிய போராட்டம்: வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடா்பாக, மாநில அளவில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும். 7 நாள்கள் சாலை மறியல் போராட்டத்தை விட ஒரு மிகப் பெரிய போராட்டம் நடத்தினால்தான் திமுக அரசு பணியும் என்றாா் மருத்துவா் ச.ராமதாஸ்.
நிகழ்ச்சியில் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு. தா.அருள்மொழி, மாநில துணைத் தலைவா் என்.எம்.கருணாநிதி, மாவட்டச் செயலா் வழக்குரைஞா் ஜெயராஜ், வன்னியா் சங்க மாவட்டச் செயலா் சம்பத், மாவட்டத் தலைவா் பாவாடைராயன், வன்னியா் சங்க நகரச் செயலா் ரவி, பாமக நகரச் செயலா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...