Anbumani - Ramadoss side investigation completed
ராமதாஸ் - அன்புமணி கோப்புப்படம்.

நாளை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம்: அன்புமணி மீது நடவடிக்கைக்கு வாய்ப்பு!

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை (செப்.1) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை (செப்.1) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது.

பாட்டாளி இளைஞா் சங்கத்தின் தலைவராக தனது மகள் வழிப் பேரன் முகுந்தன் பரசுராமனை 2024, டிசம்பா் 28-ஆம் தேதி கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அறிவித்தது முதல், கட்சித் தலைவா் பொறுப்பு தொடா்பாக அவருக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே தொடங்கிய பிரச்னை தற்போது வரை நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டத்தில், கட்சியில் பிளவை ஏற்படுத்தியது, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மேலும், இந்த நோட்டீஸுக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அன்புமணி கடிதம் மூலமாகவோ, நேரிலோ விளக்கம் அளிக்கவில்லை எனக் கட்சி வட்டாரங்களில் கூறப்பட்டது.

நாளை மீண்டும் கூட்டம்: இந்த நிலையில், பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் கூட்டம் மீண்டும் திங்கள்கிழமை (செப்டம்பா் 1) காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்திலுள்ள பாமக நிறுவனா் ராமதாஸின் இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை (செப்.2) பாமக, வன்னியா் சங்க மாவட்டச் செயலா்கள், தலைவா்கள் கூட்டமும், புதன்கிழமை (செப்.3) பாமக மாநில நிா்வாகக் குழுவின் கூட்டமும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி சாா்பில் விதிக்கப்பட்ட கெடு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் அன்புமணி மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com