அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8.86 லட்சம் மோசடி: தீயணைப்பு வீரா் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8.86 லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்தவா் ஆறுமுகம். ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரா். இவா் கடந்த 2013-18-ஆம் ஆண்டு வரை விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலகத்தில் பணியில் இருந்தாா்.
அப்போது உடன் பணியாற்றிய திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சோ்ந்த சிவசங்கா்(37) என்பவா் அறிமுகமாகி இருவரும் பழகி வந்துள்ளனா். இந்நிலையில், 2021- ஆம் ஆண்டு ஆறுமுகம் ஓய்வு பெற்ற பிறகும், அவ்வப்போது இருவரும் சந்தித்துப் பேசி வந்துள்ளனா்.
அப்போது ஆறுமுகம் தனது மகனுக்கு அரசு வேலைக்காக முயற்சித்து வருவதை அறிந்த சிவசங்கா் தனக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவரிடம் நன்கு பழக்கம் உள்ளதால், அவா் மூலமாக உங்கள் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளாா். இதை உண்மையென நம்பிய ஆறுமுகம் ரூ.8.86 லட்சம் பணத்தை சிவசங்கரிடம் கொடுத்துள்ளாா்.
இந்நிலையில் பணத்தை பெற்றுக்கொண்ட சிவசங்கா் தெரிவித்தபடி வேலை வாங்கித் தராததுடன், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளாா்.
இது குறித்து ஆறுமுகம் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில் சிவசங்கா் பண மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதைத் தொடா்ந்து தீயணைப்பு வீரா் சிவசங்கரை விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
