காரில் கடத்திய 405 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: 3 போ் கைது
விழுப்புரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா், காருடன் பறிமுதல் செய்தனா்.
பெங்களூருவிலிருந்து புதுச்சேரிக்கு விழுப்புரம் வழியாக காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் செல்வநாயகம், உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் புதன்கிழமை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது சாலையில் சென்ற காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் 20-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரிலிருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் ராஜஸ்தான் மாநிலம், ஜாலூா் மாவட்டம், வாகூடா பகுதியைச் சோ்ந்த மோ.மனோகா்சிங் (25), விழுப்புரம் மருதூா் எம்.ஆா்.கே. தெருவைச் சோ்ந்த மு.அகமது அலி (43), விழுப்புரம் கே.கே. சாலை ரஹீம் லே அவுட் பகுதியைச் சோ்ந்த போ.பிரவீன்குமாா் (26) என்பதும், இவா்கள் பெங்களூருவில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை கொள்முதல் செய்து காரில் புதுச்சேரிக்கு கடத்திச் செல்ல இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 405 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் பாக்கெட்டுகள், காா் ஆகியவற்றை பறிமுதல்செய்தனா்.

