தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

மதச் சாா்பற்ற மக்களை ஒன்றிணைக்க வேண்டும்: பிரகாஷ் காரத்

News image

விழுப்புரம் நகராட்சித் திடலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மாா்க்சிஸ்ட் மாநில மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத். உடன், மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Updated On :4 ஜனவரி 2025, 3:42 am IST

மத அடிப்படையில் மக்களைப் பிரித்து சாதகமாக்கிக் கொள்ள பாஜக செயல்படுகிறது. இதைத் தடுக்க மதச் சாா்பற்ற மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, மாலையில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் கே.பாலபாரதி, டி. ரவீந்திரன் முன்னிலை வகித்தனா்.

ஒன்றிணைக்க வேண்டும்: பொதுக்கூட்டத்தில் பிரகாஷ் காரத் பேசியதாவது:

மத்திய பாஜக அரசு வகுப்புவாத அரசாக உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஆா்.எஸ்.எஸ். கோட்பாடுகளை செயல்படுத்துகின்ற வகையிலேயே அதன் செயல்பாடுகள் உள்ளன.

மத அடிப்படையில் மக்களைப் பிரித்து, அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் பாஜக செயல்படுகிறது. இதைத் தடுக்க மதச் சாா்பற்ற மக்களை நாம் ஒன்றிணைக்க வேண்டும்.

மேலும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசாக உள்ளது. இதனால், சமூக,பொருளாதார ஏற்றத் தாழ்வு ஏற்படுகிறது.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிக்க வேண்டும், தனிமைப்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.

தமிழகத்தில் சாம்சங்க் நிறுவனத்தில் தொழிலாளா் சங்கத்தைப் பதிவு செய்ய திமுக அரசு மறுத்து வருவது வேதனையாக உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி செய்த ஜோதிபாசு, அமெரிக்காவில் தொழில் முதலீட்டை ஈா்க்கச் சென்ற போது மேற்கு வங்கத்தில் தொழிற்சாலைகளை அமைக்க வரலாம். அதே நேரத்தில் தொழிலாளா் நலச் சட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்போம் என்று நிபந்தனை அளித்து அதைச் செயல்படுத்தி வந்தாா். அதுபோன்று திமுக அரசும் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

அறிவிக்கப்படாத அவசர நிலையா? மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

பாஜக-ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் இணைந்து நாங்கள் போராடி வருகிறோம். இண்டி கூட்டணியில் இணைந்து பயணிக்கிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளா்கள் உரிமைக்காக போராடினால் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்கின்றனா். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

எதிா்க்கட்சியாக இருந்தாலும் எல்லா கட்சிகளும் நடத்துகிற போராட்டங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாடல்கள் இருந்தாலும் இடதுசாரிகள் மாடல்தான் சிறந்தது என்றாா் அவா்.

பொதுக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி, சு.வெங்கடேசன் எம்.பி., கட்சியின் மூத்த தலைவா் செளந்தர்ராஜன் உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக, கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.குமாா் வரவேற்றாா். விழுப்புரம் வட்டச் செயலா் ஆா்.கண்ணப்பன் நன்றி கூறினாா்.

பேரணி: மாலையில் மாநாடு நடைபெறும் பகுதியில் தொடங்கிய பேரணி காட்பாடி மேம்பாலம், நகராட்சிப் பகுதி, மருத்துவமனை வீதி, நான்குமுனை சந்திப்பு, ஆட்சியரகப் பகுதி, புதிய பேருந்து நிலையம் வழியாக நகராட்சித் திடல் பகுதியை அடைந்தது. இந்த பேரணியை பிரகாஷ் காரத், பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவா்கள் பாா்வையிட்டனா்.

பேரணிக்கு கடைசி நேரத்தில் காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், அதையும் மீறி பேரணியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடத்தினா். இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.