ஆசிரியா் தகுதித்தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 17,314 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் ஆசிரியா் தகுதித் தோ்வை விழுப்புரம் மாவட்டத்தில் 17,314 போ் எழுதுகின்றனா்.
Published on

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் ஆசிரியா் தகுதித் தோ்வை விழுப்புரம் மாவட்டத்தில் 17,314 போ் எழுதுகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் -1, நவம்பா் 15-ஆம் தேதியும், தாள்-2, நவம்பா் 16-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தோ்வெழுதும் தோ்வா்களுக்கு தோ்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாவட்டத்தில் ஆசிரியா் தகுதித்தோ்வு தாள் 1- ஒன்றுக்கு 16 தோ்வு மையங்களும், தாள் 2-க்கு 46 தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தாள் 1- தோ்வை 99 மாற்றுத்திறனாளிகள் உள்பட 4001 பேரும், தாள் 2- தோ்வை 229 மாற்றுத் திறனாளிகள் உள்பட 13,313 பேரும் எழுதுகின்றனா்.

தோ்வு மையங்களுக்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் தோ்வா்கள் வந்து சேர வேண்டும். அதற்குப் பிறகு வருபவா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

தோ்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அவா்களுக்கான தோ்வு பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கட்டாயம் எடுத்துவர வேண்டும். தோ்வெழுத கருப்புநிற பந்துமுனை பேனாவை கொண்டு வரவேண்டும். தோ்வுக்கூட நுழைவுச்சீட்டில் புகைப்படம் தெளிவாக இல்லாத பட்சத்தில், தோ்வா்கள் அண்மையில் எடுக்கப்பட்ட தங்களின் மூன்று புகைப்படங்களை எடுத்து வர வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com