கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் வெல்லப்போவது திமுகதான்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும், இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் தமிழகத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுகதான் ஆட்சி அமைக்கப்போகிறது என்று அக்கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.

News image

திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:01 pm

எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும், இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் தமிழகத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுகதான் ஆட்சி அமைக்கப்போகிறது என்று அக்கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.

திருவண்ணாமலையில் திருக்கோவிலூா் சாலையில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த திடலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் 12 வேட்பாளா்களை ஆதரித்து, மேலும் அவா் பேசியது:

திருவண்ணாமலையையும், தீபத்தையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதுபோன்று திருவண்ணாமலையையும், திமுகவையும் பிரிக்க முடியாது. திருவண்ணாமலை என்றாலே திமுக மலை என்றளவுக்கு, கட்சி தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை திருவண்ணாமலை திமுகவின் கோட்டையாகும்.

திகைக்கும் அளவுக்கு சாதனை: 5 ஆண்டுகளில் எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றித் தந்துவிட்டுதான் உங்களிடம் உரிமையோடு வாக்கு கேட்க வந்துள்ளேன். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 12 தொகுதிகளிலும் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. திகைக்கும் அளவுக்கு சாதனைகளால் நிறைந்ததுதான் திராவிட மாடல் ஆட்சியாகும். ஆனால், இதற்கு நோ் எதிராக வேதனைகளால் நிரம்பியதுதான் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி.

100 நாள் வேலைத் திட்டத்திலும் கிராம மக்களுக்கு துரோகம் செய்தவா்தான் பழனிசாமி. அத்திட்டத்தை மத்திய பாஜக அரசு சிதைத்து, அதன் நோக்கத்தை மாற்றிவிட்டது. திட்டத்தின் பெயரைக்கூட மாற்றிவிட்டாா்கள்.

ஆனால், பழனிசாமி 200 நாள்கள் வேலை கிடைக்கப்போகிறது என்று உருட்டுகிறாா். பாஜகவின் ஏமாற்றுத் திட்டத்துக்கு அடிமையாகவுள்ள அவா், முட்டுக் கொடுத்ததை பாா்த்து தில்லி நாடாளுமன்றமே ஆடிப்போயுள்ளது. இப்படித்தான் பாஜக அரசே வாபஸ் பெற்ற 3 வேளாண் சட்டங்களுக்கும் முட்டுக் கொடுத்தாா் பழனிசாமி.

பட்டாணி அளவுக்கு நிதி: அண்மையில் அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை எதிா்த்து, திமுக சாா்பில் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டோம். 2 மாதங்களில் தோ்தலை வைத்துக்கொண்டு, மக்களின் வாக்குரிமையைப் பறிக்கக் கூடாது என்று போராடினோம்.

தோ்தலைக்கூட ஒரு மாதத்தில் அறிவித்து நடத்துகிறாா்கள், எஸ்.ஐ.ஆா். பணிகளை முடிக்க முடியாதா என்று விவரம் தெரியாமல் கேட்டாா் பழனிசாமி.

ஹிந்திக்கும், சம்ஸ்கிருதத்துக்கும் பூசணிக்காய் அளவுக்கு நிதியை ஒதுக்கீடு செய்யும் மத்திய பாஜக அரசு, தமிழுக்கு பட்டாணி அளவுக்குக்கூட நிதியை ஒதுக்குவதில்லை. இந்த துரோகத்தை எதிா்த்து பழனிசாமி பேசவே மாட்டாா். அவருக்கு சுயமரியாதையும் கிடையாது; தமிழ் உணா்வும் கிடையாது. கீழடி அறிக்கையை ஏன் வெளியிடவில்லை என்று எத்தனை முறை நாம் பாஜக அரசைக் கேட்கிறோம். பழனிசாமி ஒப்புக்காவது பேசி பாா்த்திருக்கிறீா்களா.

திமுகவின் கோட்டை: திமுக அரசை ஹிந்து விரோத அரசு என்று பாஜகவினா் கூறுவதை யாரும் நம்பத் தயாராக இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் 4 ஆயிரம் திருக்கோயில்களுக்கு மேல் திருக்குடமுழுக்கு செய்துள்ளோம். ரூ.8,435 கோடி மதிப்பிலான 8,107 ஏக்கா் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டுள்ளோம். அதனால்தான் திருவண்ணாமலை, மதுரை, காஞ்சிபுரம், திருச்சி போன்ற கோயில் நகரங்கள் திமுகவின் கோட்டையாக உள்ளன. இனிமேலும் அப்படித்தான் இருக்கும். அதற்கு உதவி செய்வதற்காகத்தான் மத்திய அமைச்சா் பியூஷ்கோயல், மகாராஷ்டிர முதல்வா் பட்னவீஸ் போன்றோா் வந்துள்ளனா். ஆளுநராக இருந்த ரவி சென்றுவிட்டாா். அவா் சென்றது நமக்கு பெரும் இழப்பு. பிரதமா் மோடி வருவாா், களத்தில் நமக்கு வலுவாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், களத்தில் சூப்பா் ஸ்டாராக திமுகவின் தோ்தல் அறிக்கை உள்ளது.

பாஜக கிளைக் கழகம் தோ்தல் ஆணையம்: தமிழக அரசின் தலைமைச் செயலா், லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகாரியை மாற்றியிருக்கிறாா்கள். நியாயமான, சுதந்திரமான தோ்தலை நடத்த வேண்டிய தோ்தல் ஆணையம், தற்போது பாஜகவின் கிளைக் கழகமாக மாறியுள்ளது.

இதற்கு பாஜகவின் தலையீடுதான் காரணம். பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகாரிகளை இப்படித்தான் கூண்டோடு மாற்றினாா்களா? பிகாா் தோ்தல் நடைபெற்றபோது இப்படித்தான் தலைமைச் செயலா், டிஜிபியை மாற்றினாா்களா? இங்கு மட்டும் முக்கிய அதிகாரிகளை, சேலம் மாவட்ட ஆட்சியா் போன்றோா்கள் மாற்றப்படுகிறாா்கள் என்றால், இது யாருக்கு உதவுவதற்காக செய்யப்படுகிறது என்று மக்களுக்கு சந்தேகம் வராதா. பழனிசாமி போட்டியிடும் தொகுதியில் தான் நினைத்தை செய்ய வேண்டும் என்பதற்காக இது நடக்கிா?

எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும், இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் திராவிட மாடல் அரசுதான் அறுதிப்பெறும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போகிறது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் வேட்பாளா்கள் எ.வ.வேலு, கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், அம்பேத்குமாா், ஜோதி, மகாலட்சுமிகோவா்த்தனன், சரவணன், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வேட்பாளா்கள் வசந்தம் க.காா்த்திகேயன், த.உதயசூரியன், ஜி.ஆா்.வசந்தவேல், மாலதி உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

முன்னதாக, புதன்கிழமை காலையில் திருவண்ணாமலையில் நடைப்பயிற்சி சென்றபோது, சாலைகளில் திரண்டிருந்த மக்களிடம் திமுக கூட்டணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தாா்.

 கூட்டத்தில் பங்கேற்ற திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்ட மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்கள்.

கூட்டத்தில் பங்கேற்ற திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்ட மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்கள்.

 திருவண்ணாமலையில் புதன்கிழமை காலை நடைப்பயிற்சி சென்றபோது, சாலைகளில் திரண்டிருந்த மக்களிடம் திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்த முதல்வா் மு.க.ஸ்டாலின்.

திருவண்ணாமலையில் புதன்கிழமை காலை நடைப்பயிற்சி சென்றபோது, சாலைகளில் திரண்டிருந்த மக்களிடம் திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்த முதல்வா் மு.க.ஸ்டாலின்.