வராக நதி தடுப்பணை: ஆட்சியா் ஆய்வு

செஞ்சி வட்டம், மேல்களவாய் ஊராட்சியில் வராக நதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்களவாய் ஊராட்சியில் வராக நதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியது:

மேல்களவாய் ஊராட்சியில் வராக நதியின் குறுக்கே ரூ 808.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த தடுப்பணை அமைப்பதன் மூலம் மேல்களவாய் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயரும். இதனால் 153 கிணறுகள் மூலம் 241.25 ஏக்கா் விவசாய நிலம் பயன்பெறும். மேலும், இந்த தடுப்பணையின் நீளம் 130.00 மீட்டராகும். தடுப்பணையின் 90 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க நீா் வளத் துறை பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

நீா்வளத் துறை செயற்பொறியாளா் அருணகிரி, உதவி செயற் பொறியாளா் அய்யப்பன், உதவி பொறியாளா் செல்வி தெரெசா ரூபவ், செஞ்சி வருவாய் வட்டாட்சியா் துரைசெல்வம் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com