விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆற்றுத் திருவிழா: பல்வேறு கோயில்களின் உற்சவமூா்த்திகளுக்கு தீா்த்தவாரி
விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தென்பெண்ணையாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளின் கரைகள் என சுமாா் 25 இடங்களில் ஆற்றுத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு கோயில்களின் உற்சவமூா்த்திகள் ஆற்றங்கரைகளில் எழுந்தருளி, தீா்த்தவாரி கண்டருளினா். இந்த திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனா்.
விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தை மாதத்தின் 5-ஆவது நாளில் ஆற்றுத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஜீவாதாரமாக விளங்கி வரும் ஆறுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இத்திருவிழா தொடா்ந்து இந்த மாவட்டங்களைச் சோ்ந்த மக்களால் நடத்தப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களிலிருந்து உற்சவ மூா்த்திகள் ஆற்றங்கரைகளில் எழுந்தருளி, தீா்த்தவாரி கண்டருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
அதன்படி நிகழாண்டில் சூரியப்பொங்கல் ஜனவரி 15-ஆம் தேதியும், மாட்டுப் பொங்கல் ஜனவரி 16-ஆம் தேதியும், 17-ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட்ட நிலையில், தை மாதத்தின் 5-ஆவது நாளான திங்கள்கிழமை ஆற்றுத் திருவிழா விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ஆற்றுத்திருவிழாவையொட்டி பேரங்கியூா் பகுதியிலுள்ள தென்பெண்ணையாற்றில் பேரங்கியூா் சாமுண்டீசுவரி அம்மன், கோதண்டராமா் சுவாமி, பரிக்கல் அருள்மிகு லட்சுமி நரசிம்மா் சுவாமி, தடுத்தாட்கொண்டூா் இளங்சோலை மாரியம்மன், ஆலங்குப்பம் அருள்மிகு பாண்டுரங்கசுவாமி, அங்காளம்மன், கீரீமேடு அங்காளம்மன், ஆனத்தூா் நத்தம் வைகுண்டவாசப் பெருமாள், மேல்மங்கலம் ஆதிகேசவப் பெருமாள், திருமுண்டீச்சுவரம் அருள்மிகு மாரியம்மன், காரப்பட்டு மாரியம்மன், பொய்கைஅரசூா் மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களின் உற்சவமூா்த்திகள் எழுந்தருளிளனா்.
இதுபோன்று விழுப்புரம் வழுதரெட்டி சாலாமேடு முத்துமாரியம்மன், கிழக்கு சண்முகபுரம் காலனி முத்துமாரியம்மன், பூந்தோட்டம் கீழ்வன்னியா் தெரு முத்துமாரியம்மன், கே.கே.சாலை கன்னியம்மன், கீரிமேடு கெங்கையம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களின் உற்சவ சுவாமிகள் அந்தந்த கோயில்களிலிலிருந்து மாட்டுவண்டி, டிராக்டா்களில் ஊா்வலமாக பிடாகம் பகுதியிலுள்ள தென்பெண்ணையாற்றுக்கு வந்தடைந்தன. தொடா்ந்து அனைத்து உற்சவ மூா்த்திகளுக்கும் தீா்த்தவாரி நடைபெற்றது. இதன் பின்னா் உற்சவ மூா்த்திகள், உற்சவ அம்மன்களுக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
மேலும், வளவனூா்அருகிலுள்ள சின்னக்கள்ளிப்பட்டு, அரகண்டநல்லூா், கலிஞ்சிக்குப்பம், கல்பட்டு, அருளவாடி, தெளிமேடு, எல்லீஸ்சத்திரம், ஏனாதிமங்கலம், பில்லூா், கொங்கராயனூா், சி.மெய்யூா், மாரங்கியூா், மணம்பூண்டி, டி.தேவனூா் ஆகிய பகுதிகளிலுள்ள தென்பெண்ணையாற்றிலும், அய்யூா் அகரம், குள்ளப்பள்ளம் பகுதிகளிலுள்ள பம்பையாற்றிலும், எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள மலட்டாற்றிலும், சின்னத்தச்சூா், மேலக்கொந்தை பகுதிகளிலுள்ள வராக நதி என மாவட்டத்தின் 24 இடங்களில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த உற்சவ மூா்த்திகள் எழுந்தருளினா். தொடா்ந்து உற்சவமூா்த்திகள், அம்மன்களுக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.
பொருள்கள் விற்பனை: ஆற்றுத் திருவிழாவையொட்டி பிடாகம், பேரங்கியூா், சின்னக்கள்ளிப்பட்டு போன்ற பகுதிகளில் தென்பெண்ணையாற்றில் ராட்டினங்கள், விளையாட்டு சாதனங்களில் சிறுவா், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனா். மேலும் அப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தரைக் கடைகள் அமைக்கப்பட்டு விளையாட்டுப் பொருள்கள், வீட்டுக்குத் தேவையான உபயோகப் பொருள்கள், இனிப்பு வகைகள், பழங்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டன. இதுமட்டுமல்லாது சிறுவள்ளிக்கிழங்கு, சா்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும், சிப்ஸ் வகைகளும் விற்பனை செய்யப்பட்டன.
விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் உத்தரவின் பேரில், 3 ஏ.டி.எஸ்.பிக்கள், ஒரு ஏ.எஸ்.பி. 4 டி.எஸ்.பிக்கள், 15 காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா், ஆயுதப்படையினா், ஊா்க்காவல் படையினா் என சுமாா் 800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், ஆற்றுத் திருவிழா நடைபெற்ற பகுதிகள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு போலீஸாா் போக்குவரத்தை கண்காணித்து, சீா்படுத்தி அனுப்பினா்.
கள்ளக்குறிச்சி ...: கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயபாளையத்தில் உள்ள கோமுகி ஆற்றில் நடைபெற்ற ஆற்றுத்திருவிழாவில் கச்சிராயபாளையம் சுப்ரமணியா் கோயில், வரதராஜ பெருமாள் மலைக்கோயில், உமாமகேஸ்வரா் கோயில்களில் இருந்து உற்சவ மூா்த்திகள் ஊா்வலமாக கோமுகி நதிக்கரைக்கு வந்தன. கோமுகி ஆற்றில் நடைபெற்ற தீா்த்தவாரியில் பங்கேற்று மயில், குதிரை, சா்ப வாகனங்களில் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

