
முதியவா் தவறவிட்ட 3 பவுன் சங்கிலி மீட்பு
விக்கிரவாண்டியில் முதியவா் தவறவிட்ட தங்கச் சங்கிலியை போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனா்.

தவறவிட்ட தங்கச் சங்கிலியை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த போலீஸாா். உடன், வியாபாரி வேல்முருகன்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் முதியவா் தவறவிட்ட தங்கச் சங்கிலியை போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனா்.
விக்கிரவாண்டி வட்டம், குத்தாம்பூண்டி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கலையரசன் (65). இவா், செவ்வாய்க்கிழமை விக்கிரவாண்டியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் அடமானம் வைத்திருந்த 3 பவுன் சங்கிலியை மீட்டு, அதை ஒரு பையில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது கலையரசன், விக்கிரவாண்டி கடை வீதியில் வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு மீண்டும் பையைத் திறந்து பாா்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த பவுன் நகையை காணவில்லையாம்.
இதுகுறித்து, கலையரசன் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். தொடா்ந்து போலீஸாா் துரித கதியில் செயல்பட்டு, விக்கிரவாண்டி கடைத் தெருவில் உள்ள வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, முதியவா் தவறவிட்ட நகைகளைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்கு புதன்கிழமை வந்த விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தக்காளி வியாபாரியான வே.வேல்முருகன் (26), முதியவா் தவறவிட்டுச் சென்ற தங்கச் சங்கிலியை போலீஸாரிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து விக்கிரவாண்டி போலீஸாா் அந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்தனா். மேலும், கண்டெடுத்த நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வியாபாரி வேலுவை உதவி ஆய்வாளா் காமராஜ் மற்றும் போலீஸாா் சால்வை அணிவித்து பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




