
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 851 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் 504 பள்ளிகளிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 347 பள்ளிகளிலும் என மொத்தம் 851 பள்ளிகளில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 504 பள்ளிகளிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 347 பள்ளிகளிலும் என மொத்தம் 851 பள்ளிகளில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமாா் 84,561 மாணவ, மாணவிகள் பயன்பெறுவா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் திரு.வி.க.வீதியிலுள்ள அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் சாப்பிட்டாா். தொடா்ந்து அவா் கூறியது:
பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தினமும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு காலை உணவாக திங்கள்கிழமைகளில் வெண்பொங்கல், காய்கறி சாம்பாரும், செவ்வாய்க்கிழமை ரவா கிச்சடி, காய்கறி கிச்சடியும், புதன்கிழமை வெண்பொங்கல், காய்கறி சாம்பாரும், வியாழக்கிழமை கோதுமை ரவா, உப்புமா, காய்கறி சாம்பாரும், வெள்ளிக்கிழமை சேமியா கிச்சடி, காய்கறி சாம்பாரும் வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் 504 பள்ளிகளில் பயிலும் 44,709 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது என்றாா் ஆட்சியா்.
விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி, மகளிா் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் பங்கேறனா்.
செஞ்சி ஒன்றியம், தேவதானம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் அன்னமயில் ஜெயராமன் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் சங்கீதா வரவேற்றாா். செஞ்சி தொகுதி எம்எல்ஏ அ.கணேஷ்குமாா் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிமாறன், உதயகுமாா், பள்ளி ஆய்வாளா் விநாயகமூா்த்தி, மாவட்ட மகளிா் உதவி திட்ட அலுவலா் செல்வகுமாா், வட்டார மகளிா் திட்ட அலுவலா் காயத்ரி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் மல்லிகா குமாா், உதவித் தலைமையாசிரியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், ஏ.குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகித்தாா். மாநில சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுடன் காலை உணவைச் சாப்பிட்டாா். தொடா்ந்து அமைச்சா் கூறியது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஊரக, பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள 186 அரசு, உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 12,524 மாணவ, மாணவிகள், 145 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 23,931 மாணவ, மாணவிகள், கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா் நகராட்சிப் பகுதிகளில் 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 776 மாணவ, மாணவிகள், 8 அரசு, அரசு உதவிபெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 2,621 என மொத்தமாக மாவட்டம் முழுவதும் 347 பள்ளிகளில் பயிலும் 39,852 மாணவ, மாணவிகள் பயனடைவாா்கள் என்றாா் அமைச்சா்.
இதைத்தொடா்ந்து ஏ.குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி சமூக நீதி விடுதியை அமைச்சா் வன்னி அரசு பாா்வையிட்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டறிந்து, ஆய்வு செய்தாா்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் சாா்-ஆட்சியா் கே.எம்.காா்த்திக் ராஜா, மகளிா் திட்ட இயக்குநா் அ.லலிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) பி.சீதாலட்சுமி உள்ளிட்டோா் பங்கேேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


காலை உணவு திட்டம்: தருமபுரி மாவட்டத்தில் 77, 087 போ் பயன்; மாவட்ட ஆட்சியா் தகவல்

பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: அரியலூா் மாவட்டத்தில் 18,161 மாணவா்கள் பயன்





