அரசியலில் மாற்றம் காண... களமிறங்கும் ஆசிரியை!

தனியே மிதிவண்டியில் ஒற்றை ஆளாக நாள்தோறும் குறைந்தது 10 கி.மீ. தொலைவுக்கு வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்துவருகிறார் சுயேச்சை வேட்பாளர் ஒருவர்
அரசியலில் மாற்றம் காண... களமிறங்கும் ஆசிரியை!

தனியே மிதிவண்டியில் ஒற்றை ஆளாக நாள்தோறும் குறைந்தது 10 கி.மீ. தொலைவுக்கு வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்துவருகிறார் சுயேச்சை வேட்பாளர் ஒருவர். அம்பத்தூர் தொகுதியில் சுயேச்சையாக "கரும்பலகை' சின்னத்தில் போட்டியிடும் ஆசிரியை நர்மதா நந்தகுமார்தான் (37) இவர்.
 ராஜபாளையத்தைச் சேர்ந்த நர்மதா, எம்.ஏ, எம்.ஃபில். படித்துள்ளார்; சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கணவர் நந்தகுமார் தொழிலாளி. இவருக்கு 2 குழந்தைகள்.
 அம்பத்தூரில் உள்ள ஆசினி மேல்நிலைப் பள்ளியில் 3 ஆண்டுகள் ஆசிரியையாகவும், உதவும் கரங்கள் தொண்டு நிறுவனத்தில் சமூக சேவகராகவும் பணியாற்றியவர். இப்போது திருமங்கலம் திருவல்லீஸ்வரர் நகரில் உள்ள தனது இல்லத்திலேயே தனிப்பயிற்சி வகுப்பை நடத்திவருகிறார்.
 படித்து முடித்து, வறுமையால் பணிக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு மாலைநேர வகுப்பும் எடுத்து வருகிறார்.
 இந்த ஆண்டு 5 பேருக்கு பயிற்சி அளித்து பிளஸ் 2 பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுத வைத்துள்ளார்.
 விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறியைப் பெற மறுத்து, விழா மேடையிலேயே திருப்பி அளித்தவர்.
 தேர்தலில் போட்டியிடுவது குறித்து நர்மதா கூறியதாவது:
 மதுவிலக்கினை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். இலவசங்கள் எதுவும் இருக்கக் கூடாது.
 அரசியலில் மாற்றம் காண வேண்டும் என்பதற்காக, ஆசிரியையான நான் களம் காண்கிறேன்.
 ரயில்வே தொழிலாளியான எனது தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். அதநால், என்னுடன் சேர்த்து உடன்பிறந்தவர்கள் 4 பேரும் வறுமையில் வளர்ந்தோம். கஷ்டப்பட்டுப் படித்தோம். மதுவால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிகின்றன. அதை முழுமையாக அகற்ற வேண்டும்.
 கார்களில் பலரை அழைத்துக்கொண்டு பிரசாரம் செய்யச் சென்றால், அவர்களுக்கு நாள்தோறும் ஊக்க ஊதியம், உணவு, பெட்ரோல் செலவு என பல்லாயிரம் ரூபாய் செலழிக்க நேரிடும். அதற்காகவே, தன்னந்தனியாக சைக்கிளில் சென்று ஒற்றை ஆளாகப் பிரசாரம் செய்கிறேன்.
 எனக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வேட்புமனு தாக்கலுக்கு சக ஆசிரியர்களும் உடன் வந்திருந்து ஆதரவு தெரிவித்தனர். நான் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளேன்.
 நான் வென்றால், மதுக்கடைகளுக்கு பூட்டு போடுவேன். கார் வாங்க மாட்டேன். சைக்கிளிலோ அல்லது பேருந்திலோ மட்டுமே பயணிப்பேன். அம்பத்தூரில் புதை சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவேன். வீட்டுக்கு வீடு மெட்ரோ குடிநீர் இணைப்பு வழங்குவேன்.
 பாடியில் கால்வாய்களைத் தூர் வாருவேன். பாடி குப்பத்தில் நூலகம் அமைத்துத் தருவேன். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியம் பெற்றுத் தருவேன். தொழிலாளர்களின் குறைகளைத் தீர்ப்பேன். மாசு கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்.
 மாதத்துக்கு ஒருநாள் மிதிவண்டியிலேயே சென்று மக்கள் குறைகளைக் கேட்பேன். மலை போலக் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றி, இயற்கை உரமாக்குவேன்.
 தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு போட்டிகளை மாதந்தோறும் நடத்துவேன். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவேன். நீர்நிலைகளைப் பராமரித்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பேன் என்று தனது வாக்குறுதிகளைக் கூறுகிறார் சுயேச்சை வேட்பாளர் நர்மதா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com