முகப்பு
பெங்களூரு

திருக்குறள் மூலம் சமத்துவ சமுதாயத்திற்கு வித்திட்டவர் திருவள்ளுவர்: கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் மூலம் சமத்துவ சமுதாயத்திற்கு வித்திட்டவர் திருவள்ளுவர் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.

Updated On : 23 ஜனவரி 2017, 7:04 am IST
பகிர்:

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் மூலம் சமத்துவ சமுதாயத்திற்கு வித்திட்டவர் திருவள்ளுவர் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.
பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த திருவள்ளுவர் நாள்விழா மற்றும் பேரணியில் பங்கேற்று, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 18 ஆண்டுகளாக மூடிக்கிடந்த திருவள்ளுவர்சிலை, 2009-ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கவுரை எழுதியுள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் கன்னியாகுமரியில் அய்யன் வள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மக்களிடையே திருக்குறளை பரப்புவதற்காக பேருந்துகளில் திருக்குறள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. திருக்குறளை பரப்ப முதல் முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவ சமுதாயம் படைக்க விரும்பிய திருவள்ளுவர்,பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (பிறப்பினால் அனைவரும் சமம்  செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்) என்று கூறியிருக்கிறார்.
அய்யன் திருவள்ளுவரின் கருத்துகளை பின்பற்றி துன்பம் இல்லா இன்ப வாழ்க்கையை பெற வேண்டும். தமிழர்களிடையே மட்டுமன்றி அனைத்துத் தரப்பு மக்களிடமும் திருக்குறளை பரப்ப அனைவரும் முன்வரவேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.