முகப்பு
பெங்களூரு

"காந்தியைக் கொன்ற கோட்சேவை ஆதரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது'

காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை ஆதரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவர் சு.கலையரசன் தெரிவித்தார்.

Updated On : 19 மே 2019, 9:17 am IST
பகிர்:

காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை ஆதரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவர் சு.கலையரசன் தெரிவித்தார்.
இந்திய பெளத்த சங்கத்தின் சார்பில் கோலார் தங்கவயல், மாரிகுப்பத்தில் சங்க வளாகத்தில் உள்ள மகா உபாசகர் முருகேசம் சாசன தாயகா அரங்கத்தில் சனிக்கிழமை உலகப் பேரொளி புத்தபிரானின் 2,563-ஆம் ஆண்டு புத்தர் விழா, மறுமலர்ச்சியின் தந்தை க.அயோத்திதாச பண்டிதரின் 175-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் புலவர் இ.நா.ஐயாக்கண்ணு இயற்றிய புத்தர் துதிப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதன்பிறகு தலித் ராஜகோபால், வி.ஆர்.சேகர், தயாளன், சி.தனசேகரன், பி.சுந்தரம், சி.தென்னரசன், கே.கிருஷ்ணபிரசாத், கே.மகேஷ்குமார், மகேஷ்வரி கிருஷ்ணகுமார், பேராசிரியர் சி.கிருஷ்ணகுமார், கவிஞர் சு.கலையரசன், பி.ஜெயசீலன், டி.சந்திரன், வி.பி.எம்.ஜெய்பீம் சிவராஜ், டி.ராமமூர்த்தி, இரா.கு.அரங்கசாமி, பி.தங்கராஜ், பி.சாரங்கபாணி, சுத்தோதனன், இரா.வினோத், மெய்யழகன் ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.
அப்போது தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவர் சு.கலையரசன் பேசியது: நமது நாட்டின் தேசப்பிதா மகாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை நமது நாட்டின் முதல் ஹிந்து தீவிரவாதி என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். கமல்ஹாசன் கூறிய கருத்தில் தவறொன்றுமில்லை. ஆனால், காந்தியைக் கொன்ற கோட்சேவை ஒருசிலர் ஆதரிப்பது வேதனையானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த காந்தியைக் கொன்ற கோட்சேவை துதிபாடுவதை ஒருபோது மக்கள் ஏற்க மாட்டார்கள். அமைதியின் உருவான அண்ணல் காந்தியடிகள், அமைதியான அறவழியில் போராட்டம் நடத்தி சுதந்திரம் பெற்றுத் தந்ததை உலகமே போற்றுகிறது. பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அந்த மத பயங்கரவாதிகளை ஆதரிப்பது பெரும் பயங்கரவாதமாகும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும். அதற்கு நாதுராம் கோட்சே போன்ற வன்முறையாளர்களை ஆதரிக்காமல் இருப்பது நல்லது.
புத்தரும் அமைதியை விரும்பியதோடு, வன்முறையைக் கடுமையாக எதிர்த்தார். கலிங்கத்துப் போரில் ஆயிரக்கணக்கானோரை கொன்று வெற்றிக்களியாட்டம் போட்ட அசோகரின் செயல்பாட்டை புத்தர் விரும்பவில்லை. தான் செய்த தவறை உணர்ந்த அசோகர், அமைதியை போதிக்கும் புத்தமார்க்கத்தை உலகெங்கும் பிரசாரம் செய்ய முற்பட்டார். அப்படிப்பட்ட புத்தர் பிறந்த நாட்டில் வன்முறைக்கு எள்ளளவும் இடமளிக்கக் கூடாது. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தவும் கூடாது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.